ராமராஜன்… தமிழ் சினிமா ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடக்கூடிய பெயர் அல்ல. வேட்டி, சட்டையுடன் கிராமத்து கதாநாயகனாக தொடர் வெற்றிகளைக் குவித்த ‘கலை’யாட்டக்காரர். ‘மாரியம்மா…மாரியம்மா’ என கரகாட்டம் ஆடியதும், ‘மாங்குயிலே பூங்குயிலே’… ‘செண்பகமே செண்பமே’ என காதலில் உருகி, இப்போதும் ரீவைண்ட் செய்து ரசிக்கும் பாடல்களாக உள்ளன.
எத்தனை எத்தனை படங்களில் ராமராஜன் நடித்திருந்தாலும் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ படம்தான் ராமராஜனின் அடையாளம். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘பொண்ணுக்கேத்த புருஷன்’, ‘வில்லுபாட்டுக்காரன்’, ‘தெம்மாங்கு பாட்டுக்காரன்’ என ராமராஜனை வைத்து கங்கை அமரன் இயக்கிய அத்தனைப் படங்களும் வேற லெவல் ஹிட்டுதான்.
இந்த நிலையில், ‘சாமானியன்’ படத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்குப்பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் ராமராஜன். இதுகுறித்து, கங்கை அமரனிடம் பேசினோம்,
“‘சாமானியன் டீசரைப் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்தது. வெளியில் எங்கும் செல்லமுடியவில்லை என்பதால், டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துக்க முடியலை. ஆனா, நானும் ராமராஜனும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அவர், மீண்டும் நடிப்பதில் ரொம்ப சந்தோஷம். அவர் வயசுக்குத் தகுந்த மாதிரியான கேரக்டரில் நடிப்பது நல்லது. இளையராஜா, யுவன் ஷங்கர், நான் என, எங்க எல்லோருக்கும் சினிமா வேலைகள்தான் தெரியும். அதைவிட்டால், வேற என்ன இருக்கு? அதனால், அதே வேலைகளைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். அப்படித்தான், ராமராஜனும் மீண்டும் கலைக்குத் திரும்பியுள்ளார். திரும்பவும் சினிமாவில் வலம்வர மனமார்ந்த வாழ்த்துகள்.
என்னைப் பொறுத்தவரை, இயக்குநராக கதைக்கு என்ன மாதிரியான நடிப்பு வேண்டுமோ, அதை நடிகர்களிடம் வாங்கிக்கொள்வேன். ராமராஜனிடமும் அப்படித்தான் என்றாலும், தனிப்பட்ட முறையில் ராமராஜனை பிடிக்கும். ரொம்ப நல்லப் பிள்ளை. நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, வீட்டுக்கு வந்து நலம் விசாரித்துச் சென்றார். உண்மையில், ராமராஜன் சாமானியன் இல்லை, ‘அசாதரணமானவன்’. இவ்வளவு நாள் ப்ளான் பண்ணி வர்றாருன்னா கண்டிப்பா நல்ல படமாத்தான் இருக்கும். படத்துல ஏதோ இருக்கு”.
‘கரகாட்டகாரன் 2’ எதிர்பார்க்கலாமா?
“‘கரகாட்டக்காரன் 2’ எடுக்க கதை எல்லாமே ரெடி பண்ணிட்டோம். கீர்த்தி சுரேஷ் ராமராஜன் பொண்ணாகவும், விஜய் சேதுபதி பக்கத்து ஊர் டான்சர் என கதையமைத்திருந்தோம். ஆனால், ராமராஜன் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றதால், அந்தத் திட்டத்தையே கைவிட்டுவிட்டோம்”.