சட்ட விதிப்படி புதிய துணை பொது செயலாளர் நியமிக்கப்படுவார்: TKS இளங்கோவன்

உடல் நலன் காரணத்தால் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ள நிலையில், அவரது விலகலை கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தன்னுடைய உடல் நலன் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர, பாஜகவில் இணைய போகிறேன் என்று கூறவில்லை; பாஜக ஒன்றும் ரிடைர்மெண்ட் ஆபீஸ் இல்லை என்றும் டி.கே.எஸ். விமர்சனம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக சட்ட திட்டத்தின்படி துணை பொதுச்செயலாளர்களின் ஒருவர் மகளிர் ஆகவும் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது என்றும், இந்த ஆண்டு பொதுச் செயலாளர், துணை பொதுச்செயலாளருக்கான தேர்தல் வரவுள்ளது. முறையான அறிவிப்புக்குப் பிறகு சட்ட விதிப்படி புதிய துணை பொது செயலாளர் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

துணை பொதுச்செயலாளர் 2 பேர் காட்சியில் இருந்து விலகி இருப்பது தொடர்பான கேள்விக்கு, ஒருவர் உடல் நலிவு காரணமாக விலகிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார், அரசியல் ரீதியாக ஒருவர் விலகியுள்ளார். ஒன்றிற்கு, ஒன்று சம்பந்தம் இல்லை என்றார். தற்போது துணை பொதுச் செயலாளர் 5 பேர் உள்ளோம். தேவைப்பட்டால் அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய டி.கே.எஸ், உடல் நலன் காரணத்தால் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர, பாஜகவில் இணைய போகிறேன் என்று கூறவில்லை. அவர் உடல் நிலை காரணமாக கூறியிருக்கிறார். எனவே அதனை கட்சி ஏற்றுக்கொண்டு உள்ளது எனக் கூறினார்.

மேலும் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறுவது தவறு. கடந்த மாதம் திமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது சட்டப்பேரவையிலேயே குட்கா பாக்கெட்டுகளை எடுத்து காட்டினோம். தூத்துக்குடி சம்பவம் குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறினார். அப்படி சிறப்பாக சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. இப்போது அவர்கள் எங்களை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது கேலியாக உள்ளது என்றார். அதுமட்டுமின்றி எடப்பாடி-அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் காத்திருந்து இப்போது தான் சந்தித்து உள்ளார் என்று விமர்சனம் செய்தார் டி.கே.எஸ்.இளங்கோவன்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.