சென்னை : பொன்னியின் செல்வன் படத்தை அனுபவித்து பாருங்கள் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
5 மொழிகளில்
எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சோழா சோழா மற்றும் பொன்னி நதி பாடல் மக்களின் மனம் கவர்ந்த பாடலாக மாறியுள்ளது.
பயமாக இருந்தது
பொன்னியின் செல்வன் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா,பார்த்திபன் கலந்து கொண்டனர். இதில் பேசிய கார்த்தி,எப்படி வந்தியத்தேவன் கதாபாத்திரம் வந்தது என்ற கேள்வியை விட பயம் அதிகமாக இருந்தது. மணி சார் தான் நம்பிக்கை கொடுத்தார்.
ராஜராஜ சோழனை யாருக்கும் தெரியாது
ஆனாலும், குந்தவை, நந்தினி போன்ற பெண்கள் கதாபாத்திரங்களுடன் நடிக்கும் போது பயத்தோடும், பொறுப்போடும் தான் நடித்தேன். நம் வரலாற்றை பேசப்படும் படம் இது. அந்த காலத்தில் ராஜராஜ சோழன் எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியுமா? என்று மணி சாரிடம் கேட்டேன். அப்போது புகைப்படம் இல்லை ஆகையால் பலருக்கு தெரியாது என்றார்.
மார்க் போட வராதீங்க
இந்த படத்தில் கதாபாத்திர தேர்வில் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியும், கடம்பூர்,தஞ்சாவூர்,பழையார் என ஒவ்வொரு இடத்தை பார்க்கும் போதும் ரொம்ப ஆர்வமாகவே இருந்தது. இதைவிட இந்த படத்தை இவ்வளவு அழகாக சொல்லமுடியாது, மணிரத்னம் இந்த படத்தை எப்படி பண்ணி இருக்கிறார் என்று படத்திற்கு மார்க் போட வராதீங்க, இது ஒரு அனுபவம், இந்த தலைமுறைக்கு கிடைத்த அனுபவம் இதனால், படத்தை அனுபவித்து பாருங்கள் என்றார் நடிகர் கார்த்தி.