'ஆஹா… அழகு!' மழைநீர் சேகரிப்பை பிரபலபடுத்த விருதுநகரில் வித்தியாசமான முயற்சி!

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பயன்பாட்டுக்காகவும், ஊர்மக்களின் பொது பயன்பாட்டுக்காகவும் தோண்டப்பட்ட பல கிணறுகள் நிலத்தடிநீர் பற்றாக்குறையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்தன. இந்த கிணறுகள், குப்பைகள் கொட்டப்படும் இடங்களாகவும், கழிவுநீர் குழிகளாகவும் பாழடைந்து வந்தன.

பழக்கூடை தோற்றம்

எனவே மாவட்டம் முழுவதும் கைவிடப்பட்ட நிலையிலுள்ள கிணறுகளை கண்டறிந்து புனரமைப்பு செய்து பருவமழைக் காலங்களில் பெய்யும் மழை நீர் இந்தக் கிணறுகளில் வந்துசேரும் வகையில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில், மாவட்ட ஊரக பணிகள் வளர்ச்சி முகமையின் மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் திறந்த கைவிடப்பட்ட நிலையில் உள்ள கிணறுகள் பகுதிவாரியாக கணக்கிடப்பட்டு அவற்றை மறுபுனரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிணறு வடிவில்

கண்கவர் வண்ணங்களால் பழக்கூடை, தர்ப்பூசணி, ஓலைப்பெட்டி, பொங்கல்பானை போன்ற பல்வேறு வடிவங்களில் கிணறுகள் மிளிரத்தொடங்கியுள்ளது. மக்கள் மனதை கவரும் வகையில், கிணறுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதியிடம் பேசினோம்.

பொங்கல் பானை வடிவில்

“மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டன. அவற்றில் முதற்கட்டமாக 100 கிணறுகளை இலக்காக கொண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மறுபுனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இதில் 10 கிணறுகள்‌ மறுபுனரமைப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. கிணற்றின் உள்ளும், கிணற்றை சுற்றியும் வளர்ந்துள்ள முட்செடிகள், களைகள் அகற்றப்பட்டு மழைநீர் சேமிப்புக்காக மராமத்து செய்யப்படுகிறது. பின், குண்டுக்கல், ஜல்லிக்கல், மணல் உள்ளிட்டவை பரப்பப்பட்டு கிணற்றை சுற்றிலும் பெய்யும் மழைநீர் அமைப்பு வழியே கிணற்றுக்குள் விழும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப்பணிகள் ஒரு கிணற்றுக்கு ரூ.65,000 செலவில், குழந்தைகளை கவரும் வகையில் திருச்சுழி தாலுகா முத்துராமலிங்கபுரத்தில் பழக்கூடை வடிவிலும், சவ்வாஸ்புரத்தில் தர்ப்பூசணிவடிவிலும் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ஓலைப் பெட்டி, பொங்கல் பானை, ரெயின்போ மிக்ஸ் போன்ற பல வடிவங்களில் கலைநயத்துடன் வண்ணமயமாக கிணறுகளை சீரமைத்துள்ளோம்.

கூடை வடிவில்

இதற்கு கிடைத்துள்ள வரவேற்பும் எங்களை உற்சாகமடைய வைத்துள்ளது. கிணறுகளை சீரமைப்பு செய்யும் பணிக்காக மாவட்ட ஆட்சியரின் விருப்பநிதியும் வழங்குவதாக ஆட்சியர் மேகநாதரெட்டி கூறியுள்ளார்.

மாவட்டத்தில் முதற்கட்டமாக 157 கிணறுகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 100 கிணறுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, அருப்புக்கோட்டை 10, காரியாப்பட்டி 7, நரிக்குடி 3, ராஜபாளையம் 14, சாத்தூர் 13, சிவகாசி 8, ஸ்ரீவில்லிபுத்தூர் 12, திருச்சுழி 6, வெம்பக்கோட்டை 8, விருதுநகர் 12, வத்திராயிருப்பு 7 கிணறுகளில் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கடுத்தபடியாக மேலும் 300 கிணறுகளை தேர்வுசெய்து சீரமைக்க உள்ளோம்” என்றார் உற்சாகத்துடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.