குறவன்-குறத்தி ஆட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் போதுமான விபரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த முத்துமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான குறவர் பழங்குடி சமூகத்தினர் உள்ளனர். தமிழகத்தில் திருவிழா காலங்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன் – குறத்தி ஆட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் முன்பு புராணக்கதைகள், நீதிக்கதைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. சமீபகாலமாக ஆபாச நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகளவு இடம் பெறுகின்றன.

இது குறவர் சமூகத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு ஆடல், பாடல் என்ற ெபயரில் ஆபாசமான முறையில் குறவன்-குறத்தி ஆட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். போலீசார் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆபாச குறவன்-குறத்தி ஆட்டங்களை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், எந்த மாதிரியான முறையில் நிகழ்ச்சி நடக்கிறது, எங்கு, எப்போது நடந்தது என்பது குறித்த விபரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.