லக்னோ: லக்னோவில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை சப்னா சவுத்ரியை இரண்டு மணி நேரம் நீதிமன்ற காவலில் வைத்து நீதிபதி உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் ஆஷியானா பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடனமாட பாலிவுட் நடிகை சப்னா சவுத்ரி ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், அவரால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை.
இவ்விவகாரம் தொடர்பாக ஆஷியானா போலீசில் நடன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்னா சவுத்ரி மீது வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கு லக்னோ கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாத சப்னாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் அவர் கடந்த மே 10ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன்பின் அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது.
ஆனால் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வேறு வழியின்றி சப்னா சவுத்ரி நீதிமன்றத்தில் ஆஜாரானார். அப்போது அவர் தனது கைது வாரண்டை ரத்து ெசய்யுமாறு கோரியிருந்தார். இதை ஏற்க நீதிபதி சாந்தனு தியாக, சுமார் இரண்டு மணி நேரம் சப்னா சவுத்ரியை நீதிமன்ற காவலில் வைத்தார். அதனால் நீதிமன்றத்திற்குள் 2 மணி நேரமாக சப்னா சவுத்ரி நின்றிருந்தார்.
அதன்பின் நடிகையின் மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சப்னாவின் கைது வாரண்டை நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து சப்னா சவுத்ரி நீதிமன்றத்தை விட்டு வெளியே சென்றார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.