“அண்ணன் சின்ன வயசுல எனக்காக செய்த அந்த செயல்… " – மனம் திறந்த மிஷ்கின் தம்பி ஜி.ஆர் ஆதித்யா

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர் மிஷ்கின். முதல் படத்திலிருந்தே தனது தனித்துவமான திரைமொழியால் கவனம் பெற்றவர். இன்று அவரது பிறந்தநாள். இயக்குநர், நடிகர், பாடகர் என பல `முகமூடி’களை அணிந்த மிஷ்கின் தன் உடன்பிறந்த தம்பி ஜி.ஆர் ஆதித்யா இயக்கத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். மிஷ்கின் குறித்தும் அவரது பிறந்தநாள் குறித்தும் அவரின் தம்பி ஆதித்யாவிடம் பேசினோம். உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.

“மிஷ்கினிடம் பிடித்த விஷயம்?”

“ அண்ணன்கிட்ட பிடிச்ச விஷயம், எல்லோர்கிட்டயும் அன்பா பழகுறதுதான். அடுத்ததா, புத்தகங்கள் படிப்பதும் சினிமாவை ஆழமா நேசிப்பதும் பிடிக்கும். குறிப்பா, அவருடன் இருந்தா, வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களையும் பெரிய வாசிப்பாளியாக்கிவிடுவார். ஏனென்றால், அண்ணனின் பேச்சு, சிந்தனை அனைத்திலும் புத்தகங்கள்தான் நிறைந்திருக்கும். அதை, அப்படியே நம்மிடமும் கடத்திவிடுவார். அவரிடம் அசிஸ்டெண்டாக சேரும்போது ‘வாழ்க்கைல பணம் எப்போவேணாலும் சம்பாதிக்கலாம். ஆனா, வாசிப்புதான் உன்னை மேன்மைப்படுத்தும்’னு சொல்லி மூன்று புத்தகங்களைக் கொடுத்தார். ‘கண்டிப்பா படிக்கவேண்டும்’ என்று அன்புக் கட்டளையுமிட்டார். என்னைக் கேட்டால் அண்ணன் அன்பாக இருப்பதற்கும் மனிதர்களை நேசிப்பதற்கும் புத்தகங்கள்தான் காரணம் என்பேன். அப்படியொரு படிப்பாளி. மனிதர்கள் மீது மட்டுமல்லாமல் சினிமாவை ஒரு குழந்தைபோல் நேசத்தையும் பாசத்தையும் கொட்டி எடுக்கிறார். அதைப் பார்க்கும்போது, நமக்கும் சினிமா மேல் காதல் வந்துடும்”.

“அண்ணனுக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் பரிசு?”

“உடன்பிறந்த தம்பி என்றெல்லாம் பாசத்தைத் தனியாகப் பிரித்துப் பார்த்து அன்பைக் காட்டத் தெரியாதவர். உடன் இருக்கும் எல்லோரும், அவருக்குத் தம்பிதான். சமமாகத்தான் நடத்துவார். எனக்கு ஒரு சட்டை எடுத்துக்கொடுத்தால், அவரிடம் பணிபுரியும் அனைவருக்கும், அதேவிலையில் சட்டை எடுத்துக்கொடுப்பார். அதுதான் மிஷ்கின் அண்ணன். தம்பிகளுக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் பண்ணுவார். அந்த சர்ப்ரைஸ் பெரும்பாலும் சட்டையாகத்தான் இருக்கும். மனது சரியில்லை என்றாலோ, ஏதாவது சிந்தனையில் இருக்கிறார்கள் என்றாலோ `எதோ சிந்திச்சிட்டிருக்கான், தப்பா ஓடிட்டிருக்கு’ என்றுணர்ந்து, அந்த எண்ணத்தை ஸ்டாப் பண்ணுவார். `என்னடா இப்படி சட்டைப் போட்டிருக்க’ன்னு கூப்ட்டுபோய் புதுசா சட்டை வாங்கிக்கொடுத்து எண்ணத்தையே மாத்திடுவார். அதுவும், கலர்ஃபுல்லாக வாங்கிக்கொடுப்பார்.

பொதுவா, பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு, நாம ஏதாவது கிஃப்ட் கொடுக்கணும்னுதான் நினைப்போம். அதில், அண்ணன் கொஞ்சம் வித்யாசமானவர். அவர்தான், அவரோட பிறந்தநாளுக்கு எங்களுக்கு கிஃப்ட் கொடுப்பார். இந்த பிறந்தநாளுக்கும் அவரோட டீம், என்னுடைய அசிஸ்டென்ட்ஸ் சேர்த்து 20 பேருக்கு ரூ.2500 விலையில் சட்டை எடுத்துக்கொடுத்தார். எனக்கும் அதே விலையில் மஞ்சள் கலர் சட்டை எடுத்துக்கொடுத்தார். ஒவ்வொருத்தருக்கும் அவரே சட்டையைத் தேந்தெடுத்து, `இந்தக் கலர் உனக்கு நல்லாருக்கும். சந்தோஷமா இரு’ என்று வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுத்தினார். ரொம்ப இளகிய மனம் கொண்டவர். மற்றவர்கள் சந்தோஷப்படுறதைப் பார்த்து, அவர் சந்தோஷப்படுவார்”.

மிஷ்கினுடன் ஜி.ஆர் ஆதித்யா

“அண்ணனை நினைத்து நெகிழ்ந்த தருணம்?”

“எனக்கு மைக்கேல் ஜாக்சன் ரொம்பப் பிடிக்கும். அவரோட ‘டேஞ்சரஸ்’ ஆல்பம் 1991-ல் வெளியானது. அந்த ஆல்பத்தை வாங்கித்தரச் சொல்லி அப்பாக்கிட்ட கேட்டேன். அப்பா வாங்கித்தரலை. அடம்பிடிச்சிக் கேட்டுப் பார்த்துட்டேன். சாப்பிடாமவும் இருந்துப் பார்த்துட்டேன். கண்டுக்கவே இல்லை. அதனால, ரொம்ப அழுதுட்டேன். அன்னைக்கு நைட்டு தூங்கி எழுந்து பார்த்தா, அண்ணன் ‘டேஞ்சரஸ்’ ஆல்பத்தை கிஃப்டா கொடுக்கிறார். எனக்கு அப்படியொரு சந்தோஷம். குதூகலத்துல சத்தமா வச்சிக் கேட்டுக்கிட்டே இருந்தேன். ‘டேய் ரொம்ப சவுண்டா இருக்கு. கொஞ்சம் குறைச்சிக் கேளுடா’ன்னு அம்மா சொன்னப்போ, ‘விடுங்க. அவன் கேட்டு எஞ்சாய் பண்ணட்டும். டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ன்னார் அண்ணன். எனக்கும் அவருக்கும் பத்து, பன்னெண்டு வயசு வித்தியாசம் இருக்கும். ஒரு அப்பாவாதான் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கார். இந்த சம்பவத்தை இப்போ நினைச்சாலும் கண்ணெல்லாம் கலங்கிடும்”.

“ ‘டெவில்’ படத்தில் அண்ணனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?”

“அப்பா டெய்லர். பணிச்சுமையைப் போக்கிக்க நல்லா பாடுவார். சங்கீத ஞானம் கொண்டவர். அதனால, சின்ன வயசுலருந்தே அண்ணனுக்கு இசை மேல ஆர்வம் வந்துடுச்சி. மொஸார்ட், பீதோவன் ஆல்பங்களையெல்லாம் ரசித்துக் கேப்பார். வெஸ்டர்ன் கிளாசிக்கலில், இன்னைக்கு அவரோட ரசனை வேற லெவலுக்குப் போய்விட்டது. அந்த ரசனைதான், அவரது படத்திற்கு ரசனையான பாடல்களை கேட்டுவாங்க வைக்கிறது. அந்தளவுக்கு, அண்ணனுக்கு இசையில் மிகப்பெரிய நாலேஜ் உண்டு. வெறும் இயக்கத்தோடு நின்றுவிட மாட்டார். ஒரு குழந்தை வளர்வதுபோல், எல்லா விஷயத்திலும் ஈடுபாட்டுடன் இருப்பார். ‘நந்தலாலா’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘சைக்கோ’ என மூன்று படத்திலும் அண்ணனுடன் இருந்துள்ளேன். இசை ஞானியும் அண்ணனும் பயங்கரமாக பேசுவார்கள். இசையைத் தெரிந்தவர்களால்தான் அப்படியெல்லாம் பேசமுடியும். இளையராஜாவின் `செவ்வரளி தோட்டத்துல உன்னை நினைச்சேன்’ ஹேய்… மாமன் மச்சான்’ பாடல்கள் அவரோட ஃபேவரைட்.

அண்ணனோட இசை திறமையை சிறு வயதிலிருந்தே பார்த்து வந்ததால், எனது படத்தில் அவர்தான் இசையமைக்கவேண்டும் என்று இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தினேன். என் படத்திற்கு, அண்ணன் இசையமைத்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. படத்தில் உள்ள நான்கு பாடல்களும் அற்புதமாக வந்துள்ளன. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு முத்து. ‘இனிமேல் அடுத்து இவர்தான்’ என்று எல்லோருக்கும் எண்ணம் கொண்டுவந்துவிடும். அந்தளவுக்கு, அண்ணன் உழைத்துள்ளார். எல்லோருக்கும் மிகவும் பிடித்த மனதை வருடிக்கொடுக்கக்கூடியப் பாடல்களாக நிச்சயம் இருக்கும். இன்னும் பத்து நாள் ஷூட்டிங் உள்ளது. அதை, முடித்து வெளியீட்டுப் பணிகள்தான். அடுத்த ஆண்டு படம் வெளியாகிவிடும்”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.