பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் தீவிரமாக காணப்படுகிறது. இதன் காரணமாக, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, இதே போல், தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, அறிக்கை வாயிலாக, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று, செய்தியாளர்களிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். மூன்று நாட்களில் சரி ஆகி விடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும்?
குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் அரசு அதைத் தான் செய்யும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை. விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்றத்தை உருவாக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.