செய்துங்கநல்லூர் அருகே புதிதாக போடப்பட்ட சாலை ஒரே நாளில் சேதம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

செய்துங்கநல்லூர்: தெற்கு காரசேரியில் இருந்து வள்ளுவர் காலனி வரை புதிதாக போடப்பட்ட சாலை சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்துங்கநல்லூர் அருகே கருங்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி வரையிலான சாலை நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த சாலையில் கருங்குளத்தில் இருந்து தெற்கு காரசேரி காட்டுப்பகுதி வரை கடந்தாண்டு சாலை சீரமைக்கப்பட்டது.

அதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சேரகுளத்தில் இருந்து வள்ளுவர் காலனி வரை சீரமைக்கப்பட்டது. ஆனால் இதற்கிடையில் உள்ள 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலை சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று ரூ.2.13 கோடி மதிப்பில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி தெற்கு காரசேரி காட்டுப்பகுதியில் இருந்து வள்ளுவர்காலனி வரை சாலைப்பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று வள்ளுவர் காலனி பகுதியில் தார்ஜல்லிகளை கொண்டு வருவதற்காக லாரிகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அப்போது சாலை அமைக்கும் வாகனத்திற்கு பின்னால் வந்த லாரி புதிதாக போடப்பட்டிருந்த சாலையில் பக்கவாட்டில் இறங்கியது. இதனால் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. ஆனால் சாலைப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்டுகொள்ளாமல் அடுத்த இடத்திற்கு சாலைகளை அமைப்பதற்காக சென்று விட்டனர். இந்த சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஒரு நாள் மழை பெய்தால் கூட இந்த சாலை முழுவதும் வீணாகி விடும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.