புனே: மகாராஷ்டிராவில் வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் மனமுடைந்த விவசாயி, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் வட்கான் ஆனந்த் கிராமத்தை சேர்ந்த விவசாயி தஷ்ரத் கேதாரி (42), பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு, குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அலே பாடா போலீசார் விவசாயின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரமோத் க்ஷிர்சாகர் கூறுகையில், ‘தற்கொலை செய்து கொண்ட விவசாயி தஷ்ரத் கேதார், தனது வயலில் வெங்காயம் பயிரிட்டிருந்தார். அறுவடை முடிந்து சந்தைக்கு கொண்டு செல்லும் போது அதற்கான விலை கிடைக்கவில்லை. அதனால் ரூ.2 லட்சம் வரை விவசாய பொருட்களை சேமித்து வைத்தார். இந்த முறை நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் விலை கிடைக்கவில்லை.
மழையால் வெங்காயம் கெட்டுப்போனது. மேலும் அவரது வயலில் பயிரிட்டிருந்த சோயாபீன், தக்காளி பயிர்களும் சேதமடைந்தன. மேலும் அவர் கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கியிருந்தார். பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர், தற்கொலை செய்து கொள்ளும் முன் தற்கொலைக் குறிப்பு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், ‘வெங்காயம் போன்ற விவசாயப் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) நிர்ணயிக்க வேண்டும்.
இன்றைய நிலையில் விவசாயம் என்பது சூதாட்டமாக மாறிவிட்டது. பிரதமர் மோடியின் செயலற்ற தன்மையால், நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தயவு செய்து எங்களின் நியாயமான குறைந்தபட்ச விலைக்கு ஆதரவாக சட்டம் இயற்றுங்கள். உங்களின் (மோடி) பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.