முதலில் எல்லாம் திருமணம் என்பதே, பல மாதங்களுக்கு முன்பாக பேசி முடிவெடுத்து, நாலு பேரை விசாரிச்சு, நேரில் சென்று பார்த்து பாக்கு வெற்றிலை மாற்றி சம்பந்தம் பேசி முடிப்பது எனப் பல வேலைகள் நடக்கும். ஆனால், இன்றைய நவீன வாழ்க்கையில், மேற்சொன்னவையெல்லாம் மலையேறிப்போக, இணையத்தளத்திலேயே, மணமகன், மணமகள் பற்றிய படிப்பு, சாதி, வேலை, சம்பளம் என விவரங்கள் அனைத்தையும் பார்த்து, அது ஒத்துப்போன பிறகு நேராகத் திருமணம்தான் என மாறிவிட்டது. இத்தகைய முறை பெரும்பாலும் நகரவாசிகளிடையே காணப்படுகிறது.
ஒருகாலத்தில், அது என்ன ஒரு காலத்தில், இன்றும்கூட ஐ.டி-ல் வேலை செய்கிறவர்களைப் பார்த்து, “உனக்கென்னப்பா ஐ.டி-ல வேலை பார்க்கிற, கை நெறைய சம்பளம் என்று” பலர் கூறுவதுண்டு. ஆனால், தற்போது “இது என்னடா ஐ.டி-ல வேலை செய்றவனுக்கு வந்த சோதனை” என சொல்கின்ற அளவுக்கு, செய்தித்தாளில் மணமகன் தேவை என்ற விளம்பரம் வந்திருக்கிறது.
மணமகன் தேவை என்ற அந்த விளம்பரத்தில், ஒரே சாதியைச் சேர்ந்த மருத்துவர், தொழிலதிபர் மணமகன் தேவை எனப் போடப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் முக்கியமாக, “தயவு செய்து சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் அழைக்க வேண்டாம்” எனக் குறிப்பிட்டிருந்ததுதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த விளம்பரத்தின் படத்தை நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் பதிவிட, இணையவாசிகளிடையே பெரும் விவாதமே உருவாகியிருக்கிறது.