தமிழக தொழில்நுட்ப வல்லுநர்கள் 60 பேர் உட்பட இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மியான்மரின் மியாவாடியில் ஒரு கும்பலால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் கும்பல் அங்கு அவர்களை சைபர் குற்றங்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலிருந்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கடத்தப்பட்டு, பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இவர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இடம் மியாவாடிதான் என்றாலும், அது மியான்மர் அரசாங்கத்துக்கு உட்பட்ட இடம் அல்ல என்கின்றனர். மேலும், அங்கு அடைக்கப்பட்டிருப்பவர்களில் ஒரு சிலர் தங்களைக் கடத்தியவர்கள் ‘மலேசிய சீனர்கள்’ என்கின்றனர். கடந்த சனிக்கிழமை (17-9-22) அன்று, பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் SOS வீடியோ மூலம் இந்திய (மத்திய) அரசு மற்றும் தமிழக அரசு தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வெளியிட்ட வீடியோதான் இந்தச் சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
அந்த காணொளியில் முதலாளிகள் தினமும் 15 மணிநேரத்துக்கு மேல் வேலை வாங்குவதாகவும், சட்டவிரோதமான இணையதள குற்றங்கள் செய்யக் கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். மேலும், மறுத்தால் தங்களை அடிப்பதாகவும் மின்சார ஷாக் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். மியான்மரின் யாங்கூனில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த ஜூலை 5 அன்று, நேர்மையற்ற தொழில் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று (19-9-22) காரைக்கால்மேட்டைச் சேர்ந்த ராஜா சுப்ரமணியன் (60) என்பவர் காரைக்கால் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, தன் மகன் மியான்மரில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவரை மீட்கும்படியும் மனுக் கொடுத்துள்ளார். மேலும் அந்த மனுவில், தன் மகன் துபாயில் வேலைக்குச் சேர்ந்ததாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டதாக மேலாளர் சொல்லி தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பின்னர், அங்கிருந்து ஒரு கும்பலால் மியான்மருக்கு கடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மியான்மரில் பிணைக் கைதியாக இருக்கிறவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. முன்னதாக இதுபோல பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 30 இந்தியர்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
வணிகத்துறை வட்டாரத்தின் தொடர்புகள் மூலம் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரில் பிணைக் கைதிகளாக இருக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மத்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தியிருக்கின்றனர்.