சென்னை : ஜம்மு-காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதல் படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா, சோபியான் பகுதிகளில் திரையரங்குகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார்.
ஜம்மு-காஷ்மீரில் 1980ம் ஆண்டுகளில் சில தியேட்டர்கள் இயங்கிவந்த நிலையில், காஷ்மீரில் தீவிரவாதம் பரவியதால் 1990ம் ஆண்டு திரையரங்கு மூடப்பட்டன.
திரையரங்குகள் மூடப்பட்டன
ஜம்மு-காஷ்மீரில் 1990ல் தீவிரவாதம் தலைதூக்கிய நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த பதினொரு திரையரங்குகள் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளானதை அடுத்து ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன. இதையடுத்து, 1996 ம் ஆண்டு ஃபரூக் அப்துல்லா தலைமையிலான அரசாங்கம் பிராட்வே மற்றும் நீலம் ஆகிய இரண்டு திரையரங்குகளை மீண்டும் திறக்க முயற்சிகளை மேற்கொண்டன.
கைவிடப்பட்ட திட்டம்
ஆனால், தியேட்டர்கள் திறக்க அப்போது போதிய ஆதரவு இல்லாததால் திரையரங்கு செயல்பாட்டுக்கு வராமல் முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டது. இதையடுத்து, 1999ம் ஆண்டு மீண்டும் லால் சௌக் பகுதியில் ரீகல் தியேட்டர் திறக்கப்பட்டது. ஆனால், தியேட்டர் திறந்த வாரத்திலேயே தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி எதிர்ப்பை தெரிவித்ததால் திரையரங்கு மூடப்பட்டது.
மல்டிஃபிளக்ஸ் தியேட்டர்
ஜம்மு-காஷ்மீர் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், மக்களின் பொழுது போக்குக்காகவும், தகவல்களை அறிந்து கொள்வதற்காகவும் 1990ம் ஆண்டு மூடப்பட்ட திரையரங்கு 32 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. இதில் 3 திரைகளுடன் 520 இருக்கைகள் கொண்ட மல்டிஃபிளக்ஸ் திரையரங்கிற்கு ஐநாக்ஸ் நிறுவனம் பங்குதாராக உள்ளது.
முதல் படம்
இதில் முதல் இரண்டு திரைகளில் அக்டோபர் 1ந் தேதி முதல் படம் திரையிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் முதல் படமாக மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனும், இரண்டாவது திரையில், விஜய்சேதுபதி, ஆர்யா நடித்த விக்ரம் வேதா படமும் வெளியாக உள்ளது. இதனால், பென்னியின் செல்வன் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.