அகமதாபாத்: ‘மேயர்கள் அடிமட்ட அளவில் இருந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாக வைத்து செயல்படக் கூடாது’ என பிரதமர் மோடி அறிவுரை கூறி உள்ளார். குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் தேசிய அளவிலான 2 நாள் மேயர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பாஜ ஆளும் மாநிலங்களில் உள்ள மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடியே வீடியோகான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்து பேசியதாவது: மேயர்கள் நகரங்களின் முழுமையான வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் தேர்தல்களை மையமாக கொண்டு நகரங்களை உருவாக்க முடியாது என்பதால் தேர்தல் வெற்றியை மட்டுமே இலக்காக நினைக்க கூடாது. மேயர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏழை பயனாளிகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொள்வதற்கும், அந்தந்த நகரங்களை அழகுப்படுத்துவதற்கும் பணியாற்ற வேண்டும். நகர்ப்புற திட்டமிடல், செயற்கைகோள் நகரங்களை உருவாக்குதல் பெரிய நகரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் மேயர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அடிமட்ட அளவில் இருந்து மேயர்கள் பணியாற்ற வேண்டும். பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது 250கி.மீ.க்கு குறைவாக இருந்தது. தற்போது இது 750கி.மீ.க்கும் மேலம் அதிகரித்துள்ளது. மேலும் 1000 கி.மீக்கு நீட்டிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நகரங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுவது, தீப்பிடிப்பது போன்ற சம்பவங்கள் பெரும் கவலையளிக்கின்றன. முறையான விதிமுறைகளை பின்பற்றினால் இவற்றை தவிர்க்கலாம்.
இவ்வாறு பிரதமர் வலியுறுத்தினார்.