தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பாக இன்று 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்ஃபுளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று, காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்த மருத்துவத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,166ஆக அதிகரித்துள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் இன்று (செப்.21-ம் தேதி) 1000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அத்துடன், நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமும் பரிசோதனைகள் நடைபெறுகிறது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், சளி, காய்ச்சல் என எந்த அறிகுறி இருந்தாலும் இந்த சிறப்பு முகாமில் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்த முகாமை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.