கும்பகோணம்: தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியானது. இதை நம்பி விண்ணப்பித்த 60 இந்தியர்கள், தாய்லாந்து அழைத்து செல்வதாக கூறி அந்த வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு அழைத்து சென்றுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கீழக்கோட்டையூர் மேலதெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (22), அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஹரிஹரன் (21) மற்றும் கும்பகோணம் பாணாதுறை கள்ளர் தெருவை சேர்ந்த கருப்பையன் மகன் விக்னேஷ் (22) ஆகியோர் மியான்மரில் சிக்கி தவிப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அங்கு நடக்கும் கொடுமைகளை பற்றி வீடியோ மூலம் 3 வாலிபர்களும் அவர்களது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தாய்லாந்து நாட்டிலிருந்து மியான்மர் பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். சுட்டு கொன்று விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். அவர்களை மீட்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.