ஆலப்புழா: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில், இந்திய ஒற்றுமை நடை பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னின்று நடத்தி வருகிறார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற யாத்திரையின்போது ராகுல் காந்தி, அங்குள்ள மீனவர்களைச் சந்தித்துப் பேசினார். ஆலப்புழா மாவட்டம் புன்னப்ராவில் நேற்று முன்தினம் காலை நடைபயணத்தை தொடங்கிய அவர், 16 கி.மீ. கடந்து களவூரில் நிறைவு செய்தார். பின்னர், மாலையில் மீண்டும் நடை பயணத்தை தொடங்கி, 9 கி.மீ. கடந்து சேர்தலா அருகே உள்ள மயித்தாரா பகுதியில் பயணத்தை முடித்துக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று ஆலப்புழா மாவட்டம் மயித்தாரா பகுதியிலிருந்து நடை பயணத்தை 13-ம் நாளாக ராகுல் தொடங்கினார். அப்போது வழியில் செயின்ட் மைக்கேல் கல்லூரி வளாகத்தில் ராகுல் காந்தி மரக்கன்றை நட்டார். காலையில் தொடங்கிய பயணம் 14 கிலோமீட்டர் தூரம் சென்று குத்தியாதோடு பகுதியில் நிறைவடைந்தது.
இந்த 12 நாட்களில் மட்டும் ராகுல் காந்தி 225 கிலோமீட்டர் தூரம் பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன், பவன் கேரா, வி.டி. சதீஷன் உள்ளிட்டோர் சென்றனர்.