சென்னை: திமுக துணைப் பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தனது 45 ஆண்டுகால அரசியல் பயணத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார். தலைமை மீதான அதிருப்தியே அவர் திமுகவிலிருந்து விலகக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்ட விலகல் கடிதத்தில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப்பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். இது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு, அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற நீண்டநாள் விருப்பத்தின் அடிப்படையில், பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக எனது கடிதத்தை தலைவருக்கு அனுப்பிவிட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய சுப்புலட்சுமி ஜெகதீசன், பணியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்தார். 1977-ல் மொடக்குறிச்சி தொகுதியில் வென்று அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், அப்போதைய அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றார். பின்னர், 1980-ல் திமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து, ஈரோடு, மொடக்குறிச்சி, வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் பழனி, திருச்செங்கோடு மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன், மத்திய, மாநில அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
இவரது கணவர் ஜெகதீசன், கருணாநிதியின் தீவிர ஆதரவாளர். விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சுப்புலட்சுமி மற்றும் ஜெகதீசன் இருவரும் 1992-ல் தடா சட்டத்தில் கைதாகினர். 300 நாட்கள் சிறையில் இருந்த இருவரும், 1998-ல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
1996-ல் விவசாயிகள் பிரச்சினையை முன்னிறுத்தி மொடக்குறிச்சியில் 1,030 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், திமுக சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார். பின்னர், திமுகவின் உயர்நிலைப் பதவிகளில் ஒன்றான துணைப் பொதுச் செயலாளராக இருந்த சற்குண பாண்டியனுக்குப் பின்னர் மூத்த நிர்வாகி என்ற முறையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் நியமிக்கப்பட்டார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 2021-ல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், 281 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதியிடம் அவர் தோல்வியடைந்தார். இதன் தொடர்ச்சி அவரை அரசியலில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளிவிட்டது. பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதியே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுப்புலட்சுமியின் ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘மொடக்குறிச்சியில் உயர்மின் கோபுரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் முன்னின்று போராடியவர் சுப்புலட்சுமி என்பதால், பாஜக வேட்பாளர் சரஸ்வதியை எளிதாக வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதிய மாவட்ட நிர்வாகி, தேர்தல் பணி செய்யவிடாமல் கட்சி நிர்வாகிகளைத் தடுத்தார். ஒன்றியச் செயலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தேர்தல் பொறுப்பாளர் காந்திசெல்வனும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
இதனால் தேர்தலில் தோல்வியடைந்த சுப்புலட்சுமி, இதுகுறித்து தலைமையிடம் புகார் அளித்தார். திமுக மொடக்குறிச்சி ஒன்றியச் செயலர் குணசேகரன், கொடுமுடி ஒன்றியச் செயலர் சின்னசாமி ஆகியோரது செயல்பாடுகள் குறித்து ஆதாரத்துடன் புகார்அளித்தும், தலைமை கண்டுகொள்ளவில்லை. பின்னர் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் அவர் ஓரம்கட்டப்பட்டார். உட்கட்சித் தேர்தலின்போதும் சுப்புலட்சுமி தெரிவித்த புகார்களுக்கு தலைமை செவி மடுக்கவில்லை. அவர் குறிப்பிட்ட சிலருக்கு பதவி வழங்கப்படவில்லை. இதனாலேயே அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்’’ என்றனர்.
இதற்கிடையில், அவரை கடந்த 19-ம் தேதி திமுக பொதுச்செயலர் துரைமுருகன் சமாதானப்படுத்தியுள்ளார். தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் பேசியுள்ளனர். ஆனால், கட்சித் தலைவரான ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வரவில்லை.
நேற்று முன்தினம் திமுக அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலர் தேர்தல் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவி விலகல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதில், அடுத்து யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த பின்னரே, கட்சியிலிருந்து விலகுவதாக சுப்புலட்சுமி நேற்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அறிவாலயத்தில் திமுக செய்தித்தொடர்பு செயலர் டிகேஎஸ்.இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘பொதுக்குழுவில் அடுத்த துணைப் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார். சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறிய காரணத்தை ஏற்றுக்கொண் டோம்’’ என்றார்.
இதற்கிடையில், கட்சித் தலைமையிடம், சுப்புலட்சுமி ஜெகதீசன் மீது கட்சி நிர்வாகிகள் சிலர் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லை. இக்கட்டான சூழல்களை சந்தித்தபோதும் சுப்புலட்சுமி அமைதியாகவே இருந்தார். அவருக்கு 2016-ல் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.
அப்போதே தேர்தல் அரசியல் வேண்டாம் என்று தெரிவித்திருந்த அவர், அதன் பின் 5 ஆண்டுகளாக எந்த பெரிய நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை. ஆனால், 2021 தேர்தல் வந்ததும் போட்டியிட விரும்பினார். முழுமையாக தேர்தல் பணியாற்றியிருந்தால் வெற்றி பெற்றிருப்பார். ஆனால், தோல்விக்கு மற்றவர்களைக் காரணம் கூறுகிறார்’’ என்றனர்.