வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு – சீன விஞ்ஞானிகள் அசத்தல்

பீஜிங்,

சீனாவில் 2019-ம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் முற்றாக ஒழியாமல் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் உயிர் காக்கும் கவசமாக முக கவசம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் காற்றில் வைரஸ் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி மூலம் அணிந்திருப்பவருக்குக் காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன முககவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது, அவரைச் சுற்றிலும் இருக்கும் காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, முககவசம் அணிந்திருப்பவரை எச்சரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி, முக கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான யின் பாங் கூறுகையில், “முக கவசம் அணிவது நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் என்று முந்தைய ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே, காற்றில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அணிபவரை எச்சரிக்கும் முக கவசத்தை உருவாக்க விரும்பினோம். எங்கள் முக கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில், அதாவது ‘லிப்ட்’ அல்லது மூடிய அறைகள் போன்றவற்றில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் நன்றாக வேலை செய்யும்” என கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.