சென்னை: ரமணா திரைப்படம் மூலம் சினிமா துறையில் துணை நடிகராக அறிமுகமானவர் மீசை ராஜேந்திரன்.
ஆனால் 1990-லிருந்து விஜயகாந்துடன் பயணித்து பிற்காலத்தில் கட்சி தொடங்கியவுடன் அதிலும் அவருடன் இருப்பவர்.
இந்நிலையில் வடிவேலு தன்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம் ஒன்றை மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.
விஜயகாந்த் 70
கடந்த மாதம் நடிகர் விஜயகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய சினிமா நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்றது. அதற்கு முன்னர் சுதந்திர தினத்தன்று விஜயகாந்த் தனது ரசிகர்கள் முன் தோன்றி கொடி ஏற்றி வைத்தார்.
நன்றி கெட்டவர்கள்
பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ராதாரவி பேசும்போது,’நியாயமாக பார்த்தால் ரசிகர் மன்ற கடனை அடைத்து லாபத்தில் கொண்டு வந்த விஜயகாந்த்திற்கு, முதலில் நடிகர் சங்கம்தான் பாராட்டு விழா நடத்த வேண்டும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள்” என்று பேசியிருந்தார். ஆனால் இன்னொரு பக்கம் நடிகர் நாசர் விஜயகாந்திற்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடிகர் அருண் விஜய்யிடம் இது சம்பந்தமாக கேட்டபோது,”விஜயகாந்த் சாருக்கு விழா எடுக்காவிட்டால் வேறு யாருக்கு நாங்கள் செய்யப் போகிறோம் அவரால்தான் சங்கம் வளர்ந்தது” என்று பெருமையாக கூறியிருந்தார்.
வடிவேலுவின் அழைப்பு
விஜயகாந்த்திற்கும் வடிவேலுவிற்கும் சண்டையான பிறகு ஒரு முறை ஏ.வி.எம் டப்பிங் தியேட்டரில் இருந்த வடிவேலு அங்கிருந்த மீசை ராஜேந்திரனை பார்த்துள்ளார். அப்போது, நாளை ஒரு படப்பிடிப்பு இருக்கிறது நீங்கள் வந்து விடுங்கள் என்று கூறிவிட்டு அனுப்பிவிட்டாராம். மீசை ராஜேந்திரனும் அதே போல் 7 மணிக்கு மேக்கப்புடன் அங்கு சென்று காத்திருந்திருக்கிறார். ஷூட்டிங்கில் ஒரு காட்சியில் வடிவேலு மற்றும் பெசன்ட் நகர் ரவி நடித்துக் கொண்டிருந்தார்களாம்.
அவமானப்படுத்திய வடிவேலு
அப்போது அங்கிருந்த இன்னொரு நடிகர் மீசை ராஜேந்திரனிடம் வந்து, அண்ணா நீங்க நடிக்க வேண்டிய ரோல்ல தான் ரவி அண்ணன் நடிச்சிட்டு இருக்காரு. வடிவேலு அண்ணன்கிட்ட போய் என்னன்னு கேளுங்க என்று சொன்னவுடன் இடைவெளியில் வடிவேலுவை சந்திக்க சென்றாராம். அவர் ஒரு சேரில் கால் வைத்து இன்னொரு சேரில் சாய்ந்து அமர்ந்தபடி இருக்க, இவர் அருகே சென்றதும் என்னவென்று கேட்டாராம். நீங்கள்தானே அழைத்தீர்கள் என்று மீசை ராஜேந்திரன் கூற விஜயகாந்த் கூட இருக்குறவங்களுக்கு வாய்ப்பு தர மாட்டேன் போயிட்டு வா என்றாராம். அதற்கு உள்ளுக்குள்ளே கோபம் இருந்தாலும் சீனியர் நடிகர் என்பதால் வெளிக்காட்டிக்காத ராஜேந்திரன், என்னிடம் செய்ததோடு இருக்கட்டும் சார். தயவு செய்து இன்னொரு நடிகரை இப்படி வாய்ப்பு கொடுக்கிறேன் என்று அழைத்து அவமானப்படுத்தாதீர்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டதாக மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.