புதுடெல்லி: சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சி தலைவர்களை சிக்கவைப்பதில் ஒன்றிய பாஜ அரசு சாதனை புரிந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 118 எதிர்கட்சி தலைவர்கள் புலனாய்வு அமைப்பின் ரெய்டில் சிக்கியுள்ளனர். எதிர்கட்சிகளை ஒடுக்கும் விதமாக அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது ஒன்றிய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), வருமான வரித்துறை, அமலாக்க இயக்குனரகம் ஆகியவற்றை ஆளுங்கட்சி ஏவி விடுவதாக குற்றச்சாட்டுகள் கூறுவது வழக்கம்.
இந்த நிலையில், எந்த ஆட்சிக் காலத்தில் அதிகளவில் எதிர்கட்சிகள் மீது ரெய்டுகள் நடந்தன என்பது குறித்த புள்ளி விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை (முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்) சிபிஐ விசாரணை வளையத்தில் 72 அரசியல் தலைவர்கள் இருந்துள்ளனர். இதில் 43 பேர், அதாவது 60 சதவீதம் பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். 29 பேர் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள்.
* இதுவே, 2014 முதல் தற்போது வரை 8 ஆண்டுகால பாஜ ஆட்சியில், 124 அரசியல் தலைவர்கள் சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ளனர். அவர்களில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் 118 பேர். அதாவது, 95 சதவீதம் பேர். 6 பேர் மட்டுமே பாஜ கட்சியை சேர்ந்தவர்கள்.
* தற்போது எதிர்க்கட்சிகளில் அதிகபட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 30 பேர் சிபிஐ விசாரணையில் உள்ளனர். காங்கிரசில் இருந்து 26 பேர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும பிஜூ ஜனதா தளத்தில் இருந்து தலா 10 பேர், ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து 6 பேர், பகுஜன் சமாஜ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து தலா 5 பேர், அதிமுக, சமாஜ்வாடி மற்றும் மார்க்சிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மியிலிருந்து தலா 4 பேர், தேசியவாத காங்கிரசில் இருந்து 3 பேர், தேசிய மாநாட்டு கட்சி, திமுகவிலிருந்து தலா 2 பேர், பிடிபி மற்றும் டிஆர்எஸ் கட்சியிலிருந்து தலா ஒருவர் மற்றும் ஒரு சுயேச்சை ஆகியோர் சிபிஐ விசாரணையில் சிக்கி உள்ளனர்.
* பாஜ ஆட்சி காலத்தில், 12 முன்னாள் முதல்வர்கள், 10 அமைச்சர்கள், 34 எம்பிக்கள், 27 எம்எல்ஏக்கள் தவிர 10 முன்னாள் எம்எல்ஏக்கள், 6 முன்னாள் எம்பிக்கள் சிபிஐ வலையில் சிக்கி உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 4 முன்னாள் முதல்வர்கள், 2 அமைச்சர்கள், 13 எம்பிகள், 15 எம்எல்ஏக்கள், ஒரு முன்னாள் எம்எல்ஏ, 3 முன்னாள் எம்பிகள் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தப்பிக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட எதிர்கட்சி தலைவர்கள் ஆளுங்கட்சிக்கு தாவி விடுவது மட்டுமே தீர்வு என்பதால் பலரும் கட்சி மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்செயலானது
இது குறித்து சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிபிஐ விசாரிக்கும் பல வழக்குகள் நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாக வந்தவை. தேசியவாத காங்கிரசின் அனில் தேஷ்முக் மீதான வழக்கு, சாரதா, நாரதா சிட் பண்ட் மோசடி வழக்குகள், மேற்கு வங்க தேர்தல் வன்முறை வழக்கு போன்றவை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரிக்கிறது. ஒரு விசாரணை அமைப்பாக, நீதிமன்ற உத்தரவுகளையும், மாநில அரசின் உத்தரவுகளையும், ஒன்றிய அரசின் சட்டப்பூர்வ பரிந்துரைகளையும் பின்பற்றுவது எங்களின் கடமை. இதில், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அதிகமான வழக்குகள் இருப்பது தற்செயல் நிகழ்வுதானே தவிர, உள்நோக்கம் உடையது அல்ல’’ என்றார்.