ஒன் பை டூ

கல்யாணசுந்தரம், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க.

“மிகச் சரியானது. காரணம், தமிழ்நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதே தெரியாமல்தான் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். வி.ஆர் மாலில் போதைப்பொருள் பார்ட்டி நடந்து ஓர் இளைஞர் இறந்துபோகிறார்… போரூரில், காரில் வந்த பெண்ணைக் கடத்தி, கூட்டுப்பாலியல் வன்முறை நடக்கிறது… பள்ளிக் கூடத்தை மக்கள் திரண்டுபோய் அடித்து நொறுக்குகிறார்கள்… ஆனால் உளவுத்துறைக்கு எதுவும் தெரியவில்லை. காவல்துறையும் சரியாகச் செயல்படுவதில்லை, சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உத்தரவுகள், முதல்வரிடமிருந்து மட்டுமல்லாமல், பல இடங்களிலிருந்தும் வருகின்றன என அதிகாரிகள் வருத்தப்படுகிறார்கள். முதல்வர் விளம்பரப் பிரியராகவும், படத்துக்கு போஸ் கொடுக்கும் பொம்மையாகவும் மட்டுமே இருக்கிறார். கிராமங்களிலுள்ள டாஸ்மாக் பாரில்கூட, துர்கா அம்மையார் பெயரைப் பயன்படுத்தி தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்கிறார்கள். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் சபரீசனும், சினிமாத் துறையில் உதயநிதியும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். இப்படி ஆளுக்கொரு பக்கம் தனியாக ஓர் அரசாங்கத்தையே நடத்திக்கொண்டிருக் கிறார்கள். அதைத்தான், `நான்கு முதல்வர்கள் ஆட்சி செய்கிறார்கள்’ என எங்கள் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

’’இராஜீவ் காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க.

“மிகத் தவறான கருத்து. கலைஞர் குடும்பத்தின்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சிலருக்கு வழக்கம். அது இப்போது தொடங்கியதில்லை. `கலைஞர் அதை வாங்கிவிட்டார்’, `கனிமொழி இதை வாங்கிவிட்டார்’, `சபரீசன் அதை வாங்கிவிட்டார்’ என்பதெல்லாம் காலம் காலமாக நடந்துவரும் பொய்ப் பிரசாரம்தான். இவ்வளவு வருடம் ஆட்சி செய்த பிறகு, இப்போதும்கூட கலைஞர் குடும்பத்தின்மீது ஒரேயோர் ஊழல், குற்றவியல் வழக்கைக்கூடப் பதிவுசெய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், ஜெயலலிதாவோ குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு சிறைக்குச் சென்றவர். அடுத்து, எடப்பாடியும் ஊழலுக்காக சிறைக்குப் போகவிருக்கிறார். எங்கள் தலைவர் ஸ்டாலின், தன் ஐம்பதாண்டுக்கால பொதுவாழ்க்கையில், கொள்கைரீதியாக மட்டுமே தனது குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியைப்போல, அவரின் மகனையும், உறவினர்களையும் பின்னால் மறைத்து வைத்துக்கொண்டு தொழில் செய்யவில்லை. தமிழ்நாட்டில் எடப்பாடி, ஓ.பி.எஸ்., அண்ணாமலை, சீமான் என நான்கு பேர் முதலமைச்சர் கனவில் இருக்கிறார்கள். அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்!’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.