ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளச்சந்தையில் மதுவிற்ற பெண் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த திமுக கவுன்சிலரை வீட்டுக்கு அழைத்து வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவான லோக்கல் தாதா லோகேஸ்வரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
கையில் வெட்டரிவாளுடன் மிடில் ஏஜ் சொர்னாக்கா போல தோரனையாக அமர்ந்திருக்கும் இவர் தான் ‘லோக்கல் தாதா’ லோகேஸ்வரி..!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் பகுதியை சேர்ந்த 45 வயதான லோக்கல் தாதா லோகேஸ்வரிக்கு எஸ்தர் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இவர் டாஸ்மாக் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்படும் மதுப்பாட்டில்களை வீட்டில் வைத்து இரு மடங்கு விலைக்கு மது விற்பனை செய்து வந்தார்.
ஏற்கனவே தனது கணவனை கொலை செய்த வழக்கில் லோகேஸ்வரி சிறை சென்று வந்தவர் என்பதால் உள்ளூர் வாசிகள் அவரை எதிர்த்து பேச தயங்கினர்.
மதுவிலக்கு போலீசுக்கு மாமூல் தடையின்றி சென்றதால் அவர்களும் லோகேஸ்வரியை கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகின்றது
லோகேஸ்வரி கள்ளச்சந்தையில் மது விற்பதால் தங்கள் பகுதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதாக நடுவரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராக உள்ள திமுக பிரமுகர் சதீஷ் என்பவர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்தார். லோகேஸ்வரியையும் நேரில் சந்தித்து மது விற்க வேண்டாம் என்றும் சதீஷ் எச்சரித்துள்ளார். இதனால் போலீசார், மதுவிற்பனையை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி உள்ளனர்.
தினமும் ஆயிரக்கணக்கில் வந்த மது விற்பனை வருமானம் பாதித்ததால் கடுப்பான லோகேஸ்வரி சம்பவத்தன்று சமாதானம் பேசுவது போல சதீஷை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வைத்து ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி தலையில் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகின்றது, சதீஷின் சடலத்தை வீட்டுக்குள் இருந்து இழுத்து வந்து கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து வீசி விட்டு வீட்டை பூட்டி விட்டு லோகேஸ்வரி தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற சோமங்கலம் காவல்துறையினர் சதீஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லோகேஸ்வரி ஏற்கனவே விபச்சார தொழில் செய்து வந்ததாகவும் அப்போது அவர், கணவரை கொலை செய்த வழக்கில் சிக்கியதாக சுட்டிக்காட்டும் போலீசார் தலைமறைவான லோக்கல் தாதா லோகேஸ்வரியை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், போலீசாரின் கைகளில் சிக்காமல் சென்னைக்கு தப்பி வந்த லோகேஸ்வரி தனது தம்பிகள் நவமணி , ராஜேஷ், சதீஷ், கோழி அன்பு ஆகியோருடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு முன்பாக தான் அணிந்திருந்த நகைகளை எல்லம் கழற்றி உறவினர்களிடம் கொடுத்து அனுப்பிய லோகேஸ்வரி மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொண்டது குறிப்பிடதக்கது.