பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பரம்பிக்குளம் அணையின் இரண்டு மதகுகளில் திடீரென பிரச்சினை ஏற்பட்டு ஷட்டர்கள் தாமாகவே திறந்ததால் தண்ணீர் வெளியேறி சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஷட்டர்களை சரி செய்து நீர் வெளியேறுவதைத் தடுப்பது என்பது கேரள பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதற்கிடையில், பெரிங்கல்குத்து அணையின் மதகுகளும் திறக்கப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கான அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் அணையின் மற்ற இரு மதகுகளும் 10 செ.மீ அளவுக்கு உயர்த்திவிடப்பட்டுள்ளன. அதேபோல் அண்டை மாநிலமான தமிழகத்தையும் தங்களுக்கு நீர் வரத்து தரும் பாதைகளின் மடைகளை திறந்து வைக்குமாறு கேரள அரசு கோரியுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் அணை தான் தமிழகத்தின் கோவை நகர் மக்களுக்கும் முக்கிய நீராதாரமாக இருக்கிறது. இந்த அணையை தமிழக அரசும் பராமரித்துவருகிறது. இந்நிலையில், மதகுகள் தாமாக திறந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் ஆறுகளில் மீன் பிடித்தல், சுற்றுலா படகுகளை இயக்குதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் வெளியேறுவதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சாலக்குடி எம்எல்ஏ கே.சனீஷ், “நிலவரம் கட்டுக்குள் தான் உள்ளது. யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனால் கண்காணிப்பு அவசியம். அதிகாலை 1 மணியளவில் மதகுகளில் ஏற்பட்ட பிரச்சினை அறியப்பட்ட உடனேயே அருகில் உள்ள கிராமங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மக்கள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டு பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார். அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இப்போதைக்கு மழை இல்லாததால் சீரமைபுப் பணிகளை மேற்கொள்ள தோதான சூழல் நிலவுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.