கோவை / திருப்பூர் / உதகை / ஈரோடு: ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகள் விடுத்த அழைப்பின்பேரில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.
இந்து மக்களை இழிவாகப் பேசியதாக நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி, நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட, கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, சிறுமுகை, எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக, மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடையடைப்பு போராட்டம், நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. குன்னூர், கூடலூர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. உதகை, பந்தலூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
பந்தலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடைகளை மூட வலியுறுத்தியதாக, இந்து முன்னணியைச் சேர்ந்த 18-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, அவிநாசி புதிய பேருந்து நிலையம், திருமுருகன் பூண்டி, சேவூர், கருவலூர், தெக்கலூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலுள்ள அனைத்து தேநீர் கடைகள், மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன
இதேபோன்று, நீலகிரி தொகுதியில் உள்ள ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடை, வணிக நிறுவனங்கள், மளிகைக்கடை உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.
சத்தியமங்கலம் பேருந்து நிலையப் பகுதியில் திறந்திருந்த பேக்கரியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சத்தியமங்கலத்தில் 11 பேரும் புன்செய் புளியம்பட்டியில் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.