அமராவதி: அந்திரப் பிரதேச மாநிலம் சித்தூரில் காகித தட்டுகளை தயாரிக்கும் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டடுக்கு கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள ஆலையில் நள்ளிரவில் தீ பற்றியுள்ளது. மேல் தளத்தில் இருந்துள்ள உரிமையாளர் வீட்டிற்கும் தீ பரவியதால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சித்தூரின் நகர் பகுதியின் ரங்காச்சாரி தெருவில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் தரைதளத்தில் காகித கட்டுக்களை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. மேல் தளத்தில் ஆலையின் உரிமையாளர் பாஸ்கர் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார். செவ்வாய்க்கிழமையான நேற்று நள்ளிரவில் இக்கட்டிடத்தின் தரைதளத்தில் திடீரென தீ பரவியுள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடியுள்ளனர். இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது. இதில் மேல் தளத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஆலையின் உரிமையாளர் பாஸ்கர் (65), அவரது மகன் டெல்லி பாபு (35), பாலாஜி (25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மின்கசிவு தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று சோகம் என்னவென்றால், டெல்லி பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாட இருந்துள்ளார். தனது நண்பர்கள் மற்றும் தந்தை ஆகியோருடன் இன்று பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார். இதனையடுத்து விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திலிருந்து சேதமடைந்த பொருட்கள் தற்போது அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.