இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. நடப்பாண்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து நேரடி வகுப்புக்கள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிராவிலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டு தோறும் மாநில கல்வி வாரியம் சார்பில் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே பொது தேர்வு கால அட்டவணை வெளியிடப்படுகிறது.
எனவே இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணையை மாநில கல்வி வாரியம் நேற்று வெளியிட்டது.
அதன்படி 12-ம் வகுப்பு பொது தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி வரை நடக்கிறது. இதேபோல 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும் என கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது. மேலும் பொது தேர்வு தொடர்பான விரிவான கால அட்டவணை கல்வி வாரிய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.