பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இந்தச் சமூகத்தில் சாதியை ஒழிப்பதற்காகப் போராடியுள்ளனர். தற்போது 21ஆம் நூற்றாண்டு நடந்துவரும் நிலையிலும், அறிவியல் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்த போதிலும் இந்தச் சாதி ஒழிந்தபாடில்லை. இந்தகாலத்திலும் சில பழமையான கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாதியை ஒரு அடையாளமாகப் பின்பற்றி வருகிறார்கள். அதன்படி கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் தீண்டாமை இன்றளவும் பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ளது உல்லேரஅள்ளி கிராமம் இருக்கிறது, இந்த கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் ரமேஷ், ஷோபா தம்பதியினர். இவர்களது மகன் 15 வயது சேத்தன் என்கிற மகன் உள்ளார். இந்த கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஊர் திருவிழாவின் போது பூதம்மா தேவர் சிலை ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் ரமேஷ் சோபா மற்றும் அவர்களது மகன் சேத்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது சிறுவன் சேத்தன் சாமியின் உற்சவ சிலைகளை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆதிக்க சாதியினர், ரமேஷ் சோபா குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர். மேலும் அந்த குடும்பத்தினர் 60 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றனர். அப்படி செலுத்தவில்லை என்றால் அனைத்து தலித்துகள் அபராதம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் அபராதம் விதித்த அந்த கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் நாராயணசாமி உள்ளிட்ட 8 பேர் மீது மாஸ்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளர் வசந்தகுமார் சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தலித்துகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை நிராகரித்த அந்த கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷப்பா என்பவர் நாங்கள் யாருக்கும் அபராதம் விதிக்கவில்லை யாருக்கும் தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.