நடப்பாண்டுக்கான தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர் செல்வதால், அந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டாலும் கட்டணக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.aoboa.co.in என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை பல வகையான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இருக்கை வசதி, படுக்கை வசதி, குளிர்சாதன வசதி என பேருந்துகளின் வசதிகளுக்கு ஏற்பவும், வழித்தடங்களுக்கு ஏற்பவும் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில், “ஆம்னி பேருந்துகளுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை. அத்துடன், பேருந்துகள் வாங்கவும், அதன் பராமரிப்புக்கும் ஆகும் செலவு அதிகம். எனவே, ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது. இந்தியா போன்ற நாடுகளில் போக்குவரத்துத் துறையில் கட்டணம் நிர்ணயம் என்பது விமானம், ரயில், பேருந்து ஆகியவற்றில் டைனமிக் மென்பொருள் மூலமாக தேவைகள் குறைவாக உள்ள பொழுது குறைந்த அளவு கட்டணமும், தேவைகள் அதிகமாக உள்ள பொழுது அதிக அளவு கட்டணமும் மென்பொருள் மூலமாகவே நிர்ணயிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தின் சராசரி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு கட்டணம் வசூலிப்பது கிடையாது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன் ஆன்லைனில் பேருந்து கட்டணங்களை பயணிகளே பார்த்து அவர்கள் வசதிக்கு ஏற்றவாறு டிக்கெட் புக் செய்து பயணிக்கிறார்கள். அதனால் பயணிகள் விருப்பம் இல்லாமல் பயணிப்பதில்லை. அதனால் எந்தப் பயணிகளும் ஏமாற்றப்படுவதும் இல்லை. இருந்த போதிலும் அரசுக்கும் இந்தத் தொழிலுக்கு கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் சங்கங்கள் இணைந்து ஆம்னி பேருந்துகள் இயங்கும் அனைத்து வழித்தடங்களுக்கும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்துள்ளோம்.” என தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.