சஹாரன்பூர்: உத்தர பிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு, கழிவறையில் வைக்கப்பட்டிருந்த உணவு விநியோகிக்கப்பட்ட வீடியோ வெளியானதையடுத்து, மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு விநியோகிக்கப்படும் உணவு பொருட்கள் அடங்கிய பாத்திரங்கள் சிறுநீர் கழிக்கும் கழிவறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதனருகே ஒரு பேப்பரில் பூரிகளும் இருந்துள்ளன. அங்கிருந்து வீராங்கனைகள் உணவு எடுத்து வரும் வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி வைரலாக பரவியது. கழிவறையில் இருந்து பாத்திரங்களை ஊழியர்கள் வெளியே எடுத்து வரும் மற்றொரு வீடியோவும் வெளியானது. இதை கபடி வீராங்கனைகளே வீடியோ எடுத்து கடந்த 16-ம் தேதி வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோவை பார்த்து பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பல நிகழ்ச்சிகளுக்கு பாஜக அரசு கோடிக் கணக்கில் செலவிடுகிறது. ஆனால் கபடி வீராங்கனைகளுக்கு முறையான ஏற்பாட்டை செய்ய பணம் இல்லை’’ என தெரிவித்துள்ளது.
டிஆர்எஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘உத்தர பிரதேசத்தில் கழிவறையில் வைக்கப்பட்ட உணவு கபடி வீராங்கனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீராங்கனைகளை பா.ஜ.க மதிக்கும் விதம் இதுதானா? வெட்கக்கேடு!’’ என தெரிவித் துள்ளது.
இதையடுத்து சஹாரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை, உத்தர பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்த அதிகாரி அனிமேஷ் சக்சேனா கூறுகையில், மழை பெய்து கொண்டிருந்ததால், நீச்சல் குளம் பகுதிக்கு அருகே உணவு சமைக்க ஏற்பாடு செய்தோம். விளையாட்டு மைதானத்தில் கட்டுமான பணிகள் நடந்ததால், இட நெருக்கடி காரணமாக உணவு பொருட்கள் நீச்சல் குளத்துக்கு அருகே உள்ள உடைமாற்றும் அறையில் வைக்கப்பட்டிருந்தது’’ என்றார்.
இது குறித்து சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அகிலேஷ் சிங் கூறுகையில், ‘‘கபடி போட்டிக்கு மோசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக, புகார்கள் வந்தன. இது குறித்து விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘தவறு செய்த ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த ஒப்பந்ததாரர் பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்’’ என்றார்.