கீவ்: உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளை அந்நாட்டு ராணுவம் தற்போது மீட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் பிடியிலிருந்த இலங்கை மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மக்களில் பெரும்பாலானோர் தமிழர்களாவார்கள். கடந்த சில மாதங்களாக ரஷ்ய பிடியிலிருந்த இவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்துள்ளனர்.
இது குறித்து தற்போது பிபிசி செய்தி ஊடகத்திற்கு அவர்கள் பேட்டியளித்துள்ளனர். அந்த பேட்டி இங்கு மொழிப்பெயர்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
போர்
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு வந்த நிலையிலும் கூட ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. கடந்த 6 மாதங்களுக்கும் அதிகமாக தொடர்ந்து வந்த இந்த தாக்குதல் சம்பத்தில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடக்கத்தில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாக இருந்த நிலையில், இதனை எதிர்கொள்வதற்கு உக்ரைன் திணறி வந்தது.
பதிலடி
ஆனால் அமெரிக்கா பெருமளவில் உக்ரைனுக்கு உதவி செய்து வரும் நிலையில் தற்போது ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் முறியடித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றன. இதில் இசியம் நகரம் முக்கியமானதாகும். கடந்த வாரம் உக்ரைன் ராணுவம் ரஷ்ய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் ரஷ்ய ராணுவத்தினர் ஆயுதங்களை கைவிட்டு விட்டு வெளியேறிவிட்டனர். இது உக்ரைனுக்கு சிறப்பான வெற்றியாகும்.
ராணுவ வதை முகாம்
இதனையடுத்து ரஷ்ய ராணுவத்தினரின் முகாம்களிலிருந்து பொதுமக்களை உக்ரைன் ராணுவம் விடுவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் இலங்கையை சேர்ந்தவர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை விவரித்துள்ளனர். அதாவது, “நாங்கள் உயிருடன் இந்த முகாமை விட்டு வெளியேற மாட்டோம் என்று நினைத்திருந்தோம்” என திலுஜன் பத்தினஜகன் கூறியுள்ளார். இவர் ரஷ்ய ராணுவத்தால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு ராணுவ முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடத்தல்
இவர் சில இலங்கை மக்களுடன் உக்ரைனுக்கு வேலை தேடி சென்றிருந்தார். போர் மூண்டதையடுத்து கடந்த மே மாதம் தாங்கள் தங்கியிருந்த குபியன்ஸ்கிலிருந்து கார்கிவ் பகுதிக்கு பாதுகாப்பு தேடி நடைப்பயணமாக 7 பேர் ஒரு குழுவாக சென்று கொண்டிருந்தனர். இந்த குழுவில் பத்தினஜகனும் ஒருவர். இதனையடுத்து அவர்கள் ரஷ்ய ராணுவத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டு கண்கள் கட்டப்பட்டு ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள வோவ்சான்ஸ்க் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொடுமைகள்
போர் தீவிரமடைந்த நிலையில் இதற்கு தேவையானவற்றை தயாரிக்க இந்த இயந்திர தொழிற்சாலையிலேயே அவர்கள் கட்டாய உழைப்புக்காக வைக்கப்பட்டிருந்தனர். இந்த தொழிற்சாலையில் அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகளை பத்தினஜகன் விரிவாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “நாங்கள் ஒருநாளைக்கு 2 நிமிடம் மட்டுமே கழிவறைகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டோம். உணவும் குறைந்த அளவில்தான் வழங்கப்பட்டது. கழிவறையை பயன்படுத்துவதை போலவே குளிக்கவும் 2 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன” என்று கூறினார்.
நோயாளி என்று கூட பாராமல்
மேலும் இந்த முகாமில் ஆண்களும் பெண்களும் தனித்தனியே தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். இதில் தனியாக தங்கியிருந்த இந்த குழுவின் ஒரேயொரு பெண்ணான மேரி எடிட் உதஜ்குமார் அவர் எதிர்கொண்ட சிக்கல்களை விவரித்துள்ளார். அதாவது, “அவர்கள் என்னை தனி அறையில் பூட்டிவிட்டார்கள். குளிக்க போகும்போது என்னை அடித்தார்கள். மேலும், என்னை என் குழுவில் உள்ளவர்களோடு சந்திக்க அனுமதிக்கவில்லை. நாங்கள் சுமார் மூன்று மாதம் இந்த முகாமில் இருந்தோம்.” என்று கூறியுள்ளார்.
மனநோயாளி
மேரி இலங்கையில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்தவர். இவருக்கு இதய நோயும் உண்டு. ஆனால் இதற்கான மருந்துகள் ஏதும் வழங்கப்படவில்லை. இது குறித்து மேரி கூறியதாவது, “நான் தனிமையாக இருந்ததால் எனக்கு பதட்டமாக இருந்தது. நான் மன நோயாளி என நினைத்து எனக்கு மருந்து வழங்கினார்கள். ஆனால் நான் அதை எடுத்துக்கொள்ளவில்லை.” என்று கூறியுள்ளார். இந்த முகாமில் அடைபட்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
மறுப்பு
இந்த குழுவில் இருந்த சில ஆண்களின் கால் நகங்கள் பிடுங்கப்பட்டுள்ளன. மேலும் ரஷ்ய வீரர்கள் காரணமே இல்லாமல் தாக்குதல் நடத்தியுள்ளனர். குடித்துவிட்டு வீரர்கள் இந்த தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக குழுவில் தெரிவித்துள்ளனர். அவர்கள் மிகவும் சோகமாக இருந்ததாகவும், குடும்பத்தினரை நினைத்து பிரார்த்தனை செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ரஷ்யா இது போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. முன்னதாக சில முக்கிய நகரங்களை மீட்ட உக்ரைன் ராணுவம், அப்பகுதியில் சில வதை முகாம்களை கண்டறிந்துள்ளது.
நெகிழ்ச்சி
உக்ரைன் ராணுவம் இவர்கள் தங்கியிருந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் மீட்டதையடுத்து இவர்களை கண்ட சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்து இவர்களை மீட்டுள்ளனர். ரஷ்யா ராணுவத்தினரின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட 40 வயதான ஐங்கரநாதன் கணேசமூர்த்தி தனது குடும்பத்தினரை நினைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். கடந்த 3 மாதத்திற்கும் மேலாக ரஷ்யாவின் முகாம்களில் கொடுமைக்குள்ளான தமிழர்களை உக்ரைன் ராணுவம் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.