போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்கள் – தமிழக அரசுக்கு மநீம வலியுறுத்தல்!

பள்ளிக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கும் மாணவ, மாணவிகளுக்காக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குப் போக்குவரத்து வசதி இல்லாததால், ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். இதனால், பள்ளியிலிருந்து பாதியிலேயே வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ள மலைக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள், கொரோனாவுக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பவில்லை.போதுமான போக்குவரத்து வசதி இல்லாததே பள்ளி இடைநிற்றலுக்குக் காரணம் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சத்தியமங்கலம் வட்டாரத்துக்கு உள்பட்ட குன்றி மலைப் பகுதியில் செயல்படும் குஜ்ஜம்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 102 குழந்தைகள், ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தொலைவு நடந்து வந்தால்தான் பள்ளியை அடைய முடியும். இதே போல, அந்தியூர் வட்டாரம் கொங்காடை மலைப் பகுதியில் 110 குழந்தைகள் அடர்ந்த வனப் பகுதியில் தினமும் 10 கிலோமீட்டர் பயணம் செய்து, ஒசூர் உயர்நிலைப் பள்ளியைச் சென்றடைகின்றனர்.

தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள விளாங்கோம்பை மலைப் பகுதியில் இருந்து வினோபா நகர் மற்றும் கொங்கர்பாளையம் உயர்நிலைப் பள்ளிக்கு 10 கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டும் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர். யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பாதைகளில் பயணிப்பது, பள்ளிக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது.

போக்குவரத்து வசதி இல்லாததால், வன விலங்குகளையும், நீண்ட தொலைவையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பள்ளிக்கு நடந்தே வர வேண்டியுள்ளது. பாதுகாப்பு கருதி பலரும் பள்ளிக்கு வருவதைத் தவிர்ப்பதால், பள்ளி இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் பள்ளியைத் தொடங்க வேண்டும், பள்ளிக்குச் செல்லத் தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், பெரும்பாலான மலைக் கிராமங்களில் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து வசதி செய்துதரப்படவில்லை.

தமிழகத்தின் பெரும்பாலான மலைப் பகுதிகள் மற்றும் வனத்தையொட்டிய பகுதிகளில் செயல்படும் பள்ளிகளுக்கு உரிய போக்குவரத்து வசதி கிடையாது. இதனால், மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்வதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. பாதுகாப்பற்ற சூழலில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதால், பலரும் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர்.

குறிப்பாக, மலைவாழ், பழங்குடியின மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கு இது தடையாக உள்ளது. எனவே, மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சாலை மற்றும் பேருந்து வசதி செய்துகொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றலைத் தடுத்து, அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.