கோவை: ஆ.ராசா எம்.பி.,க்கு மிரட்டல் விடுத்து பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு காவல்துறையினர் இன்று (செப்.21) கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி அமைப்பின் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
அதில், பீளமேடு புதூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,‘ “ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன்” என்று பேசினார்.
பாலாஜி உத்தம ராமசாமியின் இந்த அவதூறான பேச்சுக்கு திமுக, திக, தபெதிக உள்ளிட்ட பல்வேறு திராவிட அமைப்பினர், கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். . மேலும், பாலாஜி உத்தமராமசாமியின் இந்த பகிரங்க மிரட்டல் தொடர்பான பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், தமிழக முதல்வர், தந்தை பெரியார், ஆ.ராசா எம்.பி.,. குறித்து பேசி, மிரட்டல் விடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தபெதிகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
இந்நிலையில் இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உதவி ஆய்வாளர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து இன்று (செப் 21) காலை அவரை கைது செய்து, பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
பாஜகவினர் போராட்டம்: பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த, அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் இன்று காலை பீளமேடு காவல் நிலையம் முன்பு திரண்டனர். கைது செய்யப்பட்ட பாலாஜி உத்தம ராமசாமியை விடுவிக்க வேண்டும், அவதூறாக பேசிய ஆ.ராசா எம்.பி.,யை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர். பின்னர்,பீளமேடு – ஹோப்காலேஜ் வழித்தட அவிநாசி சாலையில் பேருந்துகளை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை பீளமேடு காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாலாஜி உத்தம ராமசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.
பின் வாங்க மாட்டேன்: முன்னதாக பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது,‘‘ ஒரு மதத்தை குறித்து பேசியவரை கண்டிக்காமல் உள்ளனர். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை நிரூபிக்கவும். இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். என் சகோதரிகளை தாய்மார்களை பழித்துப் பேசியவர் யாராக இருந்தாலும் விடமாட்டேன்,’’ என்றார்.