தமிழகத்தில் தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்துவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள், தாள்-1 தாள்-2 என 2 நிலைகளில் இருக்கும். கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு தேர்வாகவும், தாள் – 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வாகவும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பில், இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1ல் லெட்டர் & ஸ்டேட்மெண்ட் தேர்வாகவும், தாள்-2ல் ஸ்பீடு தேர்வாகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்தும், பழைய முறைப்படி தேர்வை நடத்தவும் உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் `தமிழகத்தில் தட்டச்சு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கோரி திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த தனி நீதிபதி தமிழகத்தில் பழைய முறைப்படி தட்டச்சு தேர்வை நடத்த உத்தரவிட்டார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திருச்சி, தட்டச்சு பயிற்சி நிலைய உரிமையாளர் பிரவீன் குமார் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, “தமிழகத்தில் பழைய முறைப்படி தட்டச்சு தேர்வை நடத்துவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது” எனக் உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM