ஆந்திர மாநிலத்தில் தரமற்ற மதுபானங்கள் விற்று முதல்வர் ஜெகன்மோகன் பல ஆயிரம் கோடி ஊழல்-சித்தூரில் சந்திரபாபு பேட்டி

சித்தூர் : ஆந்திர மாநிலத்தில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்து முதல்வர் ஜெகன்மோகன் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் கிளை சிறையில் உள்ள முன்னாள் எம்எல்சி சீனிவாஸ் உள்பட 8 பேரை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நேற்று நேரில் சந்தித்தார். பின்னர், வெளியே வந்து நிருபர்களிடம் கூறியதாவது:

குப்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது  ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். மேலும், தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எல்எல்சி சீனிவாஸ் உள்பட 8 பேரை கைது செய்து சித்தூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், 70 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் மக்களாட்சி நடக்கவில்லை. சர்வதிகார ஆட்சி நடக்கிறது. போலாவரம் அணை திட்டத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளது.

ஜெகன்மோகன் கடந்த 2019ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றதில் இருந்து ஒரு நலத்திட்ட பணிகள் கூட செய்யவில்லை. எனது 14 வருடத்தில் அந்திரி நீ வா அணை,  தெலுங்கு கங்கா அணை, காளேறு அணை உள்ளிட்டவை கட்டப்பட்டது. முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் ஒரு டிராக்டர் மணல் ₹8 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அவரது ஆதரவாளர்கள் மணலில் பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். தரமற்ற மது பானங்கள் விற்பனை செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார். அனந்தபூர் மாவட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது. அந்த மாவட்டத்தில் தனியார் கார் கம்பெனியை தொடங்க நடவடிக்கை எடுத்தேன்.

தற்போது அந்த கார் கம்பெனியிடம் முதல்வர் ெஜகன்மோகன் பங்கு கேட்பதால் சென்னையில் முதலீடு செய்ய பணிகள் மேற்கொண்டு வருகிறது. தொழிற்சாலைகள் இருந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், எதற்கெடுத்தாலும் பங்குகள் கேட்பதால் முதலீடு செய்த நிறுவனங்கள் வேறொரு மாநிலத்திற்கு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.

இந்த ஆட்சியில் ஊழல், ரவுடிகள் ராஜ்ஜியம், கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெறும்.
இவ்வாறு, அவர் கூறினார். பின்னர், அங்கிருந்து சித்தூர் கங்கனப்பள்ளியில் உள்ள முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதாவின் வீட்டிற்கு சென்று பேசினார். முன்னாள் முதல்வர் சந்திரபாபு வருகையையொட்டி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் சித்தூர் கிளை சிறை அருகே குவிந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.