மும்பை; மும்பை நவ ஷேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்பிலான ‘ஹெராயின்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதிமதுரம் பூசப்பட்ட பெரிய கண்டெய்னரில் மறைந்து வைத்து கடத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களில் இதுவே அதிக மதிப்பிலானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. போதைப்பொருட்களை கடத்தி வந்த பாகிஸ்தானியர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்குள்ள மிகப் பெரிய பறிமுதல் ஒன்றில், சுமார் 22 டன் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெராயின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1,725 கோடி என டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் போதை பொருள்கள் நவிமும்பையில் நவசேவா துறைமுகத்துக்கு கன்டெய்னரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் கப்பலில் இருந்து வந்து இறங்கிய கன்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பெரிய கன்டெய்னரில் 22,000 (22 டன்) கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து, கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கண்டெய்னரில், ஹெராயின் கடத்தலை கண்டுபிடிக்காமல் இருக்க அதிமதுர குச்சிகளில் ஹெராயின் பூசப்பட்டு எடுத்து வரப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கண்டெய்னர் பெட்டகத்துக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.