மயிலாடுதுறையில் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அரசுப் பள்ளியொன்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். `இங்குப் படிக்கும் மாணவர்கள் சிலர், கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர்’ என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக எழுந்து வருகிறது. இந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் 11-ம் வகுப்பு படிக்கும் தன்னுடைய மகனை, சக மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு தாக்கியதாக மாணவனின் தந்தை பள்ளியில் புகார் தெரிவிக்கிறார். அவருக்குப் பதிலளிக்கும் தலைமையாசிரியர், “இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் பலர் கஞ்சா புகைக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது. இது குறித்து போலீஸில் பலமுறை புகார் தெரிவித்திருக்கிறோம்.
போலீஸாரும் இந்தப் பள்ளியிலுள்ள மாணவர்களுக்கு பலமுறை போதை குறித்து விழிப்புணர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கியிருக்கின்றனர்” என்கிறார்.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் பேசுகையில், “இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். இந்த மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், சில சமூக விரோதிகள் பள்ளிக் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாணவர்களிடையே மது புகையிலைகள் மற்றும் கஞ்சா ஆகிய தீயப்பழக்கம் அதிகரித்து வருகிறது. அதை யார் கொண்டு வந்து பள்ளி மாணவர்களிடம் சேர்க்கிறார்கள் என்பதை மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.
இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையில் நகராட்சி உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அடங்கிய குழுவினர் நகரிலுள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், போதைப்பொருள்களை பதுக்கி அவற்றை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்தனர்.