லூசியானா: காதல் விவகாரத்தில் ஆசிரியையின் மூக்கை மாணவன் உடைத்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூக்கு எலும்புகள் உடைந்த நிலையில், தற்போது அந்த ஆசிரியை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மாணவர்கள் சொல்வதை கேட்காமல், இரு மாணவர்களின் சண்டையை விலக்கிவிட முயற்சித்த ஆசிரியைக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆசிரியை தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
முக்கோணக் காதல்
அமெரிக்காவில் உள்ள லூசியாணா மாகாணம் லேக் சார்லஸ் நகரில் அமைந்துள்ளது செயின்ட் பீட்டர்ஸ் உயர்நிலைப் பள்ளி. இங்கு சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு 11-வது கிரேடில் (வகுப்பு) படிக்கும் இரு மாணவர்களும் ஒரே மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளனர். இதனால் அந்த மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்துக்கும் புகார் சென்றுள்ளது.
பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை
இதையடுத்து, பள்ளி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து பேசியது. இனிமேல் இவர்கள் பள்ளியில் வைத்து சண்டையிட்டுக் கொண்டால் இருவரும் பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தலைமை ஆசிரியர் கடுமையாக எச்சரிக்கவும் செய்தார். மேலும், இதனை ஏற்றுக்கொண்டு இரு மாணவர்களின் பெற்றோரும் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டும் சென்றனர்.
ப்ரப்போஸ் செய்ய முடிவு
ஆனால், அந்த மாணவர்கள் திருந்துவதாக இல்லை. படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் அந்தக் குறிப்பிட்ட மாணவியின் பின்னால் சுற்றுவதையே இருவரும் முழுநேர வேலையாக வைத்திருந்தனர். இந்நிலையில், அந்த மாணவியிடம் காதலை தெரிவித்து விட அவர்களில் ஒரு மாணவர் முடிவு செய்தார். இதுகுறித்து தனது நண்பர்களிடமும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், காதலை ‘ப்ரப்போஸ்’ செய்யும் போது அந்த மாணவிக்கு கொடுப்பதற்காக பரிசையும் அவர் வாங்கி வகுப்பறைக்கு நேற்று வந்தார்.
வகுப்பறையிலேயே சண்டை
இந்த விஷயம் எப்படியோ இன்னொரு மாணவனுக்கு தெரிந்துவிட, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மாணவர்கள் இடையே சண்டை ஏற்பட்டதால் அங்கிருந்த கணித ஆசிரியை அமெண்டா ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தார். சண்டையிடும் மாணவர்களை விலக்கிவிட அவர் சென்றார். அப்போது அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியை அமெண்டாவை தடுத்து நிறுத்தினர். மாணவர்கள் மூர்க்கத்தனமாக சண்டையிடுவதால் அவர்கள் அருகில் செல்ல வேண்டாம் எனக் கூறினர்.
உடைந்தது ஆசிரியை மூக்கு
எனினும், மாணவர்களின் பேச்சை கேட்காத ஆசிரியை அமெண்டா, சண்டை போட்டுக் கொண்டிருந்த மாணவர்களின் இடையில் சென்று அவர்களை விலக்கி விட்டுக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு மாணவன் ஆசிரியை அமெண்டாவின் மூக்கில் ஓங்கி ஒரு குத்துக் குத்தினான். இதில் ஆசிரியையின் மூக்கு உடைந்து ரத்தம் பீறிட்டுக் கொட்டியது. ரத்தத்தை பார்த்த ஆசிரியை அமெண்டா, அங்கேயே மயங்கி விழுந்தார்.
தீவிர சிகிச்சை
இதையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூக்கில் உள்ள எலும்புகள் உடைந்துள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த இரு மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கி தலைமை ஆசிரியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.