மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மூன்று பிரிவுகளாக பிரித்து, அதனடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி பயிற்றுநர் தேர்வு பட்டியலை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்திக் கொள்ளலாம் ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சீர் மரபினர் சங்கத்தின் தலைவர் ஜெபமணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு முடிவுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதில் MBC (V), MBC(DNC)மற்றும் (MBC) என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இது போல 3 பிரிவுகளின் கீழ் தேர்வு பட்டியலை வெளியிட்டது சட்டவிரோதமானது. ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் விரைவில் நடைபெற உள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே மிகவும் பிற்படுத்தப்பட்டுருக்கான இட ஒதுக்கீட்டை மூன்று பிரிவுகளாக பிரித்து, அதனடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி பயிற்றுநர் தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதேபோல மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்திக் கொள்ளலாம். ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது என குறிப்பிட்டு, வழக்கு தொடர்பாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.