யாழ் மாவட்ட செயலகத்தில் உணவுக் கையிருப்பு பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைத்துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து பிரஜைகளுக்கும் நாட்டில் நிலவும் எந்தவொரு நிலமையின் கீழும் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான போதுமான உணவினை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையை உருவாக்குதல் என்னும் நோக்கத்துடன் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (21) காலை இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த பொறிமுறை, உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான பிரதேச ஒருங்கிணைந்த பொறிமுறை மற்றும் கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையம் ஆகிய பொறிமுறைகளை உருவாக்குதல் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
மாவட்டத்திற்குள் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி போசாக்கின்மையை ஒழித்தல், இது தொடர்பாக சரியான திட்டமிடல்களை மேற்கொள்ளுதல் மற்றும் மதிப்பீடுகள் செய்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.எஸ்.முரளிதரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.செ.நிக்கொலஸ்பிள்ளை, இணையவழி நிகழ்நிலை மூலம் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலாநிதி.ஜே.ஜி.எல். சுலக்சன, ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி. வட்டகொட, லெப்டினன்ட் கேணல் ஞானடிக ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.