நா. முத்துக்குமாருக்கு நன்றி சொன்ன ஹாரிஸ் ஜெயராஜ் – வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் நா. முத்துக்குமார் எப்போதும் ஸ்பெஷல். அவரது வரிகள் அலங்காரமின்றி எளிமையாக இருந்ததால் பலதரப்பினரையும் சென்று சேர்ந்தன. இதனால் நா. முத்துக்குமாரை இளைஞர் முதல் பெரியவர்வரை அனைவரும் ரசித்தனர். தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களில் முதலிடத்தில் அவர் இருந்தார். பெரிய இயக்குநர், சின்ன இயக்குநர் என வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரேமாதிரியான மொழியை கொடுத்தார். 

அதுமட்டுமின்றி தங்கமீன்கள், சைவம் என தொடர்ச்சியாக 2013 மற்றும் 2014ஆம் வருடங்களில் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை தொடர்ச்சியாக பெற்றார். மேலும் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில் கடந்த 2016ஆம்  ஆண்டு அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இழப்பை நினைத்து இன்றும் அவரது ரசிகர்கள் வருந்திக்கொண்டிருக்கின்றனர்.

காட்சி படிமத்தையோ ஒரு நிலத்தின் தன்மையையோ அல்லது அமைப்பையோ பெரும்பாலும் நா. முத்துக்குமார் தன்னுடைய பாடல்களில் சேர்த்துக்கொள்வது அவரது சிறப்புகளில் மற்றொன்று ஆகும். அப்படி அவர் சாமி திரைப்படத்தின் ஓபனிங் பாடலான “திருநெல்வேலி அல்வாடா” பாடலை எழுதினார். அந்தப் பாடல் முழுவதும் தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களை வைத்து அவர் எழுதியிருப்பார்.

 

அப்படி அந்தப் பாடலில் அவர், ‘பாளையங்கோட்டையில் ஜெயிலு பக்கம் ரயிலு கூவும்’ என்று எழுதியிருந்தார். தற்போது அந்த வரிகளுக்கு ஏற்ற வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பாளையங்கோட்டை சிறை காண்பிக்கப்பட்டதை அடுத்து அதன் அருகிலேயே ரயில் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த வீடியோவை ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பகிர்ந்து இந்தப் பாடலுக்கு நன்றி. இப்பாடல் திருநெல்வேலியின் ஐகான் என குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை Tag செய்திருந்தார்.

 

அதற்கு பதிலளித்த ஹாரிஸ், “இன்றுவரை இது எனக்கு தெரியாது. நா. முத்துக்குமாருக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து நா.முத்துக்குமாரை நினைவுகூர்ந்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.