புதுடெல்லி: பி.எம் கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரிய முன்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2020-ல் நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவத் தொடங்கியபோது, அவசர நிவாரண உதவிகளை அளிப்பதற்காக பி.எம். கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டது. பி.எம். கேர்ஸ்-க்கு நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு வருமான வரிவிலக்கு உண்டு.
பி.எம். கேர்ஸ் நிதிக்கு கிடைத்த நிதி உதவியைக் கொண்டு பி.எம். கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் எனும் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் 29ம் தேதி தொடங்கப்பட்டது. கொரோனாவால் பெற்றோரை அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 4,345 குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பி.எம். கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரிய முன்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி, டெக் ஃபார் இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆனந்த் ஷா ஆகியோர் இதன் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய அறங்காவலர்களும், ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
அனைவரையும் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பி.எம். கேர்ஸ் நிதியின் அங்கத்தினர்களாக ஆகி இருப்பதற்காக மகிழ்ச்சி தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பி.எம். கேர்ஸ் நிதியின் தொலைநோக்கு திட்டம் குறித்தும், பாதிக்கப்படுபவர்களுக்கான அவசர கால உதவியை வழங்குவதோடு, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய தொடர் செயல் திட்டங்களை வகுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.