மயிலாடுதுறை அருகே கூடுதல் பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கூடுதல் பேருந்து போக்குவரத்து வசதி கோரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மணல்மேடு, திருச்சிற்றம்பல், கடலங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து, அருகில் உள்ள மாவட்டப் பகுதிகளிலிருந்தும் 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

காலை, மாலை வேளைகளில் கல்லுரிக்கு வந்து செல்லும் வகையில் போதுமான பேருந்து போக்குவரத்து வசதி இல்லாதக் காரணத்தால் கூட்ட நெரிசலிலும், படிகளில் தொங்கியபடியும் மாணவர்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியிலிருந்து பேரணியாக வந்த மாணவர்களை தடுத்து நிறுத்தி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஏற்கெனவே கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கல்லூரி அருகே மணல்மேடு- வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரிக்கு வந்து செல்லும் வகையில், கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும். கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ், வட்டாட்சியர் மகேந்திரன், மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ராமமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.