கிரிக்கெட்டைப் பொறுத்தவரை விதிகளில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்வதும், புதிய விதிகள் வந்து கொண்டே இருப்பதும் வழக்கம்தான். அந்த வரிசையில் சில புதிய விதிகளைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்போது அமல்படுத்தவுள்ளது.
புதிதாக வரும் பேட்ஸ்மேனுக்குதான் ஸ்ட்ரைக்:
ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகும் போது, இரு பேட்ஸ்மேன்களும் பாதி பிட்ச் வரை கடந்து இருந்தால் களத்தில் இருக்கும் மற்றொரு பேட்ஸ்மேன் அடுத்த பந்தை ஆடுவது வழக்கம். தற்போது அந்த விதி நீக்கப்பட்டு ரன் ஓடி இருந்தாலும் ஓடாவிட்டாலும் புதிதாக வரும் பேட்ஸ்மேன்தான் அடுத்த பந்தை ஆட வேண்டும் என்று விதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விதி நடந்து முடிந்த ஐபிஎல்-லில் பின்பற்றப்பட்டாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இப்போதுதான் செயல்படுத்தப்பட உள்ளது.
புது பேட்ஸ்மேனுக்கான நேரம்:
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட் விழுந்த பின்னர், புதிய பேட்ஸ்மேன் இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு முன்பு இந்த அவகாசம் மூன்று நிமிடங்களாக இருந்தது. இப்போது இரண்டு நிமிடங்களுக்குள் புதிய பேட்ஸ்மேன் வரவில்லை என்றால் எதிரணியின் கேப்டன் டைம் அவுட்டிற்கு அப்பீல் செய்யலாம். டி20 போட்டிகளில் ஏற்கனவே இருக்கும் 90 நொடி என்ற கால அவகாசமே தொடரும்.
பந்தில் எச்சில் பயன்படுத்தக் கூடாது:
பொதுவாக கிரிக்கெட்டில் பந்தில் எச்சில் தடவிப் பக்குவப்படுத்துவது வழக்கம். கொரோனா வந்த பின்பு இரண்டு ஆண்டுகளாக இதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தத் தடை நிரந்தரமான ஒன்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பந்தில் வியர்வையைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையுமில்லை.
பேட்ஸ்மேனின் உடல் அல்லது பேட் பிட்சில் இல்லையென்றால் அது டெட் பால்:
ஒரு பேட்ஸ்மேன், வீசப்படும் பந்தைச் சந்திக்கும் போது அவரது பேட் அல்லது உடல் பிட்சுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் பிட்சிற்கு வெளியில் போய் ஆடினால் அது டெட் பாலாகக் கணக்கில் கொள்ளப்படும். அதேபோல் பந்து வீசுபவர் பிட்சிற்கு வெளியில் பந்து வீசினால் அது நோ பாலாக எடுத்துக்கொள்ளப்படும்.
பந்து வீசும் போது நியாயமற்ற முறையில் நகரக் கூடாது:
பந்துவீச்சாளர் பந்து வீச ஓடிவரும்போது பீல்டர்கள் நியாயமற்ற முறையிலோ இல்லை வேண்டுமென்றோ நகர்தல் கூடாது. அப்படிச் செய்தால் பேட்டிங் அணிக்கு ஐந்து ரன்கள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் வீசப்பட்ட பந்து டெட் பந்தாகக் கணக்கிடப்படும்.
Non Striker-ஐ ரன் அவுட் செய்தல்:
மன்கட் என்ற வார்த்தைக்குப் பெரிதாய் முன்னோட்டம் தேவையில்லை. தற்போது மன்கட் நியாயமற்ற விதிமுறை (Unfair play) பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவிற்குக் கீழ் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இனி மன்கட்டால் ஏற்படும் விக்கெட்டுகள் சாதாரண ரன் அவுட்டாகவே கணக்கிடப்படும்.
பேட்ஸ்மேன் இறங்கி வந்தால் பந்தை எறிந்து ரன் அவுட் செய்வது செல்லாது:
முன்னர் ஒரு பேட்ஸ்மேன், பந்துவீசி முடிக்கும் முன்னரே இறங்கி வந்து பந்தை ஆட முயற்சி செய்யும் போது பந்துவீச்சாளர் பந்தை கீப்பரிடம் எரிந்து ரன் அவுட் செய்ய முடியும். ஆனால் இந்த விதி தற்போது மாற்றி அமைக்கப்பட்டு, அப்படிச் செய்தால் அந்தப் பந்து டெட் பாலாகக் கணக்கில் கொள்ளப்படும்!
மற்ற விதிகள்:
பந்து வீசும் அணி வழங்கப்பட்ட நேரத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசவில்லை என்றால் கடைசி சில ஓவர்களில் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே ஒரு வீரர் வழக்கத்தை விடக் குறைவாக இருக்கவேண்டும் என்ற விதி கடந்த ஜனவரி மாதம் முதல் டி20 போட்டிகளில் அமல்படுத்தப்பட்டது. இதே விதி மே 2023-ல் ஒருநாள் போட்டி உலகக்கோப்பைக்கான சூப்பர் லீக் போட்டிகள் (2020–2023 ICC Cricket World Cup Super League) முடிவுக்கு வந்த பின் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் அமல்படுத்தப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்து விதிகளும் அக்டோபர் 1-ம் தேதி முதல் எல்லா சர்வதேச போட்டிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். இந்த விதிமுறை மாற்றங்கள் குறித்த உங்களின் கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.