கர்நாடகா: சாமி சிலைகளை தொட்ட பட்டியலின சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம்!

கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் சாமி சிலையை தொட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்த மாற்று சமூகத்தினர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ள உல்லேரஅள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் ரமேஷ் – ஷோபா தம்பதியர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு சேத்தன் (15) என்ற மகன் உள்ளான். இந்நிலையில், இந்த கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஊர் திருவிழாவின் போது பூதம்மா தேவர் சிலை ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
image
இதில் ரமேஷ் சோபா மற்றும் அவர்களது மகன் சேத்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது சிறுவன் சேத்தன் சாமியின் உற்சவ சிலைகளை கைகளால் தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மற்றோர் சமூகத்தினர், ரமேஷ் சோபா குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர். மேலும் அந்த குடும்பத்தினர் ரூ.60 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் பட்டியலின மக்கள் சேர்ந்து அபராதம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் அபராதம் விதித்த அந்த கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்ப்பா மற்றும் நாராயணசாமி உள்ளிட்ட 8 பேர் மீது மாஸ்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளர் வசந்தகுமார் சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.
image
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை நிராகரித்த வெங்கடேஷப்பா, நாங்கள் யாருக்கும் அபராதம் விதிக்கவில்லை யாருக்கும் தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.