வாரணாசி: பகுஜன் சமாஜ் எம்பி ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வாரணாசி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை உத்தரபிரதேச போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். எதிர்முனையில் பேசியவர், ‘வாரணாசி எம்பி – எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம்.
பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த கோசி தொகுதி எம்பி அதுல் ராயை, ஒவ்வொரு வழக்கிலும் இருந்தும் அவரை நீதிமன்றம் விடுவிப்பதால் எங்கள் குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். அதையடுத்து உஷாரான போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்ப நாய் படை குழு அதிகாரிகள், வாரணாசி கோர்ட் வளாகத்தில் உள்ள எம்பி – எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்திற்கு விரைந்தனர்.
அங்கு மூலை முடுக்கெல்லாம் சோதனையிட்டனர். ஆனால் நீதிமன்ற வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் அல்லது வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சதீஷ் கணேஷ் கூறுகையில், ‘கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இருந்தும் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.