ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என தலைமையாசிரியர் கூறியதாக வீடியோ வைரலாகி வருகிறது. முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டதற்கு நான் அப்படி கூறவில்லை என்று தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய மாணவி ஒருவரை சால் அணிந்து (ஹிஜாப் அணிந்து) பள்ளிக்கு வரக்கூடாது என சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை தெரிவிப்பது போன்றும், அதற்கு மாணவியின் தாய் தமிழக அரசு அப்படி ஒரு ரூல்ஸ் போடவில்லை என்றும் அவரிடம் விவாதம் செய்கிறார்.
அதன் பின்பு மாணவியின் தாயார் தலைமை ஆசிரியையிடம் தமிழக அரசும் பள்ளிக் கல்வித்துறையும் அப்படி ஒரு சட்டம் இயற்றவில்லை என்பதை நிரூபித்தால் அனுமதிப்பீர்களா என பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறும்போது, இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டதற்கு பள்ளி மாணவியை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று நான் கூறவில்லை என விளக்கம் அளித்துள்ளார். இதை அடுத்து தற்போது பள்ளி மேலாண்மை குழு மூலம் சுமுகமாக பேசி முடிக்கப்பட்டு பள்ளிக்கு இஸ்லாமிய மாணவிகள் அவருடைய விருப்பப்படி வரலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM