பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அனைத்து பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்க பாஜக அரசு 40% கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு குற்றசாட்டியுள்ளது. முதல்வருக்கு நேரடியாக பணம் அனுப்புங்கள் எனக் கூறி கியூ ஆர் கோடு வடிவில் பேடிஎம் படத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை படத்தை சேர்த்து காங்கிரஸ் ஒட்டியுள்ளது. சாலைகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை பார்த்த பாஜக நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை போலீசார் கிழிதெறிந்தனர். சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஈஸ்வரப்பாவே தனது தற்கொலைக்கு காரணம் என கூறி, பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை இழந்தார். மேலும் சாலை பணிகளுக்கு 4 கோடி ரூபாயை விடுவிக்க ஈஸ்வரப்பா 40% கமிஷன் கேட்டதாக அவர் புகார் ஒன்றையும் கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக கர்நாடக பாஜக அரசு மீது ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்து வரும் நிலையில், இன்று பேடிஎம் ஸ்கேனர் போன்று PayCM எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டி பாஜகவுக்கு எதிராக நூதன பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.