3 நாள்களுக்கு பிறகு விமர்சியுங்கள் – ஊடகங்களுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை

கொரோனா உலகத்தை சிறைப்பிடித்ததை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. அந்த சமயத்தில் ஓடிடி தளங்கள் அதிகளவு பெருகின. அதனையடுத்து பல படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின. ஒருகட்டத்தில் ஓடிடியின் அசுர வளர்ச்சி காரணமாக திரையரங்குகள் இனி நிலைக்குமா என்ற கேள்வியும்கூட பலரிடம் எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து திரையரங்குகள் வெளியாகின. பல படங்கள் திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. ரசிகர்களும் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், சில கோரிக்கைகளையும் வைத்திருக்கின்றனர்.

இந்தச் சூழலில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  பன்னீர்செல்வம், “திரையரங்கில் வெளியாகும்   திரைப்படங்களை 8 வாரத்திற்கு பிறகே OTTயில் வெளியிட வேண்டும். எந்த OTTயில் படம் வெளியாகிறது என்பது குறித்து முன்னரே அறிவிக்கக்கூடாது.

படம் வெளியான மூன்று நாட்களுக்கு  பின்னரே விமர்சனங்களை ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கையை நாங்களும் ஆதரிக்கிறோம். கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தற்போதுதான்  திரையரங்குகள் மீண்டு வரும் நிலையில் சொத்து வரி உயர்வு  மற்றும் மின்சாரக் கட்டண உயர்வால் திரையரங்குகள் மீண்டும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

பெரிய திரையரங்குகளை இரண்டு திரையரங்குகளாகவோ அல்லது மூன்று திரையரங்குகளாகவோ பிரிப்பதற்கான அனுமதியை பொதுப்பணித்துறையிடம் பெற வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு என்பதை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு என மாற்றம் செய்து தர வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.