காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ்
கட்சியின் இடைக்கால தலைவராக, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி உள்ளார். இவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தோல்வி காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சித் தலைவராக பதவியேற்கும்படி பல முறை வலியுறுத்தியும் அவர் அதை ஏற்கவில்லை.
இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கும் வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டு வருவதால், காங்கிரஸ் கட்சிக்கு, உறுதியான, தெளிவான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தத் தேர்தலில், காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சசி தரூர், அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இதற்கு சோனியா காந்தியும் இசைவு தெரிவித்து விட்டார். இருவரும் விரைவில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் இன்று பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி உள்ளார்.
கேள்வி:
காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சராகவும் அசோக் கெலாட் தொடர முடியுமா?
பதில்:
நிச்சயமாக முடியவே முடியாது. ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே நீடிக்க முடியும். இதை வலியுறுத்தி தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதய்பூரில் சிந்தனை மாநாடு நடைபெற்றது. இதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
கேள்வி:
காங்கிரஸ் தலைவராக யார் வருவார்? அசோக் கெலாட் அல்லது சசி தரூர்?
பதில்:
பொறுத்திருந்து பார்ப்போம். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் ஏன் போட்டியிடக் கூடாதா…?தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு… 30 ஆம் தேதி (வேட்புமனு தாக்கல் கடைசி நாள்) மாலை உங்களுக்கு பதில் தெரியும்.
கேள்வி:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தி குடும்பத்தைச் சார்ந்தவர் இல்லாதது குறித்து…
பதில்:
அதில் எந்த கவலையும் இல்லை. தேர்தலில் யார் போட்டியிட விரும்புகிறாரோ அவர் போட்டியிடும் உரிமையைப் பெற்றுள்ளார். மேலும் ஒருவர் போட்டியிட விரும்பவில்லை என்றால், அவரை போட்டியிடும்படி வற்புறுத்த முடியாது. அவ்வளவு தான். கடந்த காலங்களில் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவரைக் கொண்டு தான் காங்கிரஸ் செயல்பட்டது. நரசிம்ம ராவ் இருந்தபோது நாங்கள் செயல்பட்டோம் அல்லவா? அதே போல் சீதாராம் கேசரி இருந்தபோது செயல்பட்டோம் அல்லவா…!
கேள்வி:
காங்கிரசில் ராகுல் காந்திக்கு என்ன ரோல்?
பதில்:
கட்சித் தலைவர் கொடுக்கும் பணியை ராகுல் காந்தி செய்து முடிப்பார்.
கேள்வி:
காங்கிரஸ் முகமா ராகுல் காந்தி?
பதில்:
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடந்து வரும் 119 யாத்ரிகளில் அவரும் ஒருவர். (கிண்டலாகத் தெரிவித்தார்)